×

குற்றவாளிகளிடம் செல்வாக்கு இருக்கிறது என்பதற்காக நீதிபதிகள் அதிகாரத்திற்கு அடிபணிந்து விடக்கூடாது: ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா பரபரப்பு பேச்சு

சென்னை: குற்றவாளிகளிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அந்த செல்வாக்கிற்கு நீதிபதிகள் அடிபணிந்து விடக்கூடாது என்று சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த கர்நாடக உயர்  நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துகுவிப்பை வழக்கை விசாரித்து அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா.  சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி இவர் வழங்கிய தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. தீர்ப்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகளால்  பாராட்டப்பட்டது. பின்னர் இவர், கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளராக பொறுப்பேற்றார். இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று ஓய்வு பெற்றார். இந்நிலையில், சென்னையில் வக்கீல் ஜெ.ரவீந்திரன் நேற்று முன்தினம் நடத்திய ஆன்லைன் கருத்தரங்கில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது: ஊழல் தடுப்பு சட்டத்தை வலுவிழக்கவும், நீர்த்துப்போகவும் செய்வதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வர கடந்த 2013ல் முயற்சி நடந்தது. அந்த சட்ட திருத்தம் திரும்பப்பெறப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், திரும்பப் பெறப்படவில்லை.  ஊழல் தடுப்பு சட்டத்தின் முக்கிய சரத்துகள் சட்ட திருத்தத்தின் மூலம் மாற்றம் செய்யப்பட்டது.  இந்த சட்ட திருத்தத்தில் ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு முன் அனுமதி பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. இந்த சட்ட திருத்தத்தில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு ஊழியர்களை பாதுகாக்கவும், அவர்கள் மீதான ஒட்டுமொத்த விசாரணையையும் நீர்த்து போகச் செய்யவும் வழி ஏற்படுத்தப்பட்டது. நீதிபதிகள் ஊழல்தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவு  செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்கும்போது அந்த வழக்கில் சமநிலையான தீர்ப்பை வழங்க வேண்டும். பெரும்பாலான குற்றவாளிகள் அரசியல் அதிகாரத்துடனும் செல்வாக்குடனும் வருகிறார்கள். இதற்கு நீதிபதிகள் அடிபணிந்து விட்டால்  தீர்ப்பு  விபரீதமானதாகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்….

The post குற்றவாளிகளிடம் செல்வாக்கு இருக்கிறது என்பதற்காக நீதிபதிகள் அதிகாரத்திற்கு அடிபணிந்து விடக்கூடாது: ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Michael Cunha ,Chennai ,Jayalalithah ,Judge ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...