×

சுற்றுச்சூழல் பாதிப்பு, இறக்குமதியை குறைக்க 4 ஆண்டுகளில் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்க இலக்கு: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: பெட்ரோலுடன் 20% எத்தனால் கலந்து 2025ம் ஆண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சுழல் தினத்தையொட்டி, எத்தனால் பயன்பாடு குறித்து வரைப்படத்தை வெளியிட்டு, புனேவில் 3 இடங்களில் ஈ-100 (100 சதவீதம் எத்தனால்) விநியோக நிலையங்களின் முன்னோடி திட்டத்தையும் பிரதமர் மோடி காணொலி மூலமாக நேற்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது: சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை குறைப்பதற்கும், கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும்  பெட்ரோலுடன் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதற்கு 2030ம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது இது 5 ஆண்டுகள் குறைக்கப்பட்டு, 2025ம் ஆண்டே இந்த இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ​​பெட்ரோலுடன் 8.5% எத்தனால் கலக்கப்படுகிறது. இது, 2014ல் 1.5% ஆக இருந்தது. அதிக கலவை சேர்ப்பதால் எத்தனால் கொள்முதல் 38 கோடி லிட்டரில் இருந்து 320 கோடி லிட்டராக உயர்ந்தது. இது, 20% கலவையை அடையும்போது மேலும் உயரும். கடந்தாண்டு, எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்வதற்காக ரூ.21,000 கோடியை செலவிட்டன. எத்தனால் மீதான கவனம் சுற்றுச்சூழலிலும், விவசாயிகளின் வாழ்க்கையிலும் சிறந்த பலனை அளிக்கிறது.  எட்டு மடங்கு எத்தனால் கொள்முதல் அதிகரிப்பின் பெரும்பகுதி நாட்டின் கரும்பு விவசாயிகளுக்கு பயன் அளித்துள்ளது. எத்தனால் உற்பத்தியால்இதற்கு முன்பு 4 முதல் 5 கரும்பு உற்பத்தி செய்யும்  மாநிலங்கள் மட்டுமே  பலன்  அடைந்தன. இப்போது, இந்த பலன் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். விரைவில், பெட்ரோலுடன் 10% எத்தனால் கலக்க திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய 4 கோடி லிட்டர் எத்தனால் தேவைப்படும்.  இது, சர்க்கரை ஆலைகள் மூலமாகவும், தானியங்களில் இருந்தும் உற்பத்தி செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : PM Modi , Environmental impact, 20% ethanol blending target with petrol in 4 years to reduce imports: PM Modi
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி