அடக்கம் செய்யப்பட்டது யார் உடல்?: ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்டவர் மீண்டு வந்ததால் அதிர்ச்சி..!!

கிருஷ்ணா: ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்ததாக அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட சடலத்திற்கு உறவினர்கள் இறுதி சடங்கு செய்த 10 நாட்களில் உயிரிழந்ததாக கூறப்பட்டவர் வீடு திரும்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த முக்தியாலா கிரிஜானம்மாள் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 12ம் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 15ம் தேதி கிரிஜாம்மாள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் சடலத்தையும், இறப்பு சான்றிதழும் வழங்கியது. 

இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் கல்லறை தோட்டத்தில் முறைப்படி அடக்கம் செய்தனர். இதனிடையே கிரிஜானம்மாளின் மகனும் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மறைவிற்காக வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அப்போது உயிரிழந்ததாக கருதப்பட்ட கிரிஜானம்மாள் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். கிரிஜானம்மாள் உயிருடன் வந்ததை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விஜயவாடா மருத்துவமனை ஊழியர்கள் செய்த தவறே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து, கிரிஜானம்மாள் உடல் என கூறி வழங்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டவரின் உடல் யாருடையது என தெரியாமல் மருத்துவமனை நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர். கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்டவர் மீண்டு வந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>