×

கோயில்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டத்திற்கு இணையதளம் வாயிலாக நன்கொடை அளிக்கும் வசதி: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழக  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உதவியாளர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்கள் ஆகியோரது பசிப் போக்கும் வகையில் கோயில்களிலிருந்து உணவுப் பொட்டலங்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கோயில்கள் சார்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உன்னதமான அன்னதான திட்டத்தினைத் தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட கூடுதல் நிதி தேவைப்படுவதால் அன்னதான திட்டத்திற்கு தாராளமாக  நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அன்னதானத்திற்கு நன்கொடை வழங்குதலை எளிமைப்படுத்தி இணையவழியாக செலுத்தும் வசதியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

nஅன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தை (hrce.tn.gov.in) பார்வையிட்டு அதன் முகப்பு பக்கத்தில் தோன்றும் “நன்கொடை” என்ற தலைப்பை தேர்வு செய்ய வேண்டும்.  தேர்வு செய்தவுடன் பொது நன்கொடை, அன்னதானம் நன்கொடை மற்றும் திருப்பணி நன்கொடை என்ற மூன்று திட்டங்கள் இணையதளத்தில் தோன்றும். n அன்னதான நன்கொடை செய்ய விரும்புவோர் ‘அன்னதானம் நன்கொடை’  என்ற தலைப்பை தேர்வு செய்ய வேண்டும்.  தற்போது முதற்கட்டமாக 57 கோயில்களின் பெயர்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நன்கொடை செலுத்த விரும்புவோர் கோயில்களில் எந்த கோயிலுக்கு தாங்கள் நன்கொடை செலுத்த விரும்புகிறீர்களோ அந்த கோயிலை தேர்வு செய்ய வேண்டும்.

nநன்கொடை செலுத்த விரும்புவோர் தங்களது பெயர், முகவரி, அஞ்சலகக் குறியீடு, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செலுத்த விரும்பும் தொகை ஆகியவற்றை கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும்.  வருமானவரி விலக்குப் பெற விரும்பினால் தங்களது நிரந்தர கணக்கு எண்ணையும் (பான்) பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செலுத்தப்படும் நிதியானது, சம்பந்தப்பட்ட கோயில்களின் பெயரில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்கிற்கே நேரடியாகச் சென்று விடும்.  அன்னதான திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைக்கு, இந்திய வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80ஜிஇன் கீழ் வரிவிலக்கும் உண்டு.


Tags : Charity ,Minister of Charity ,Sekarbabu , Website Donation Facility for Temples Charity Project: Charity Minister Sekarbabu
× RELATED சுற்றுலா சென்ற போது வாலிபர் திடீர் மரணம்