×

'மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி விற்பனை செய்ய முடியாது'!: அமெரிக்காவின் மாடர்னா, ஃபைசர் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்..!!

வாஷிங்டன்: மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி விற்பனை செய்ய வாய்ப்பில்லை என்று மாடர்னா, ஃபைசர் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் தெரிவித்துவிட்டன. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய பல்வேறு மாநில அரசுகள் வெளிநாட்டு நிறுவனங்களை நேரடியாக நாடியுள்ளன. காங்கிரஸ்  ஆளும் பஞ்சாப் அரசு தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் மாடர்னா, ஃபைசர், ஃபுட்னிக் -வி, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களை தொடர்புகொண்டது. இதில் மாடர்னா, ஃபைசர் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மாநில அரசுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடியாது என தெரிவித்துவிட்டன. 


தங்கள் நிறுவனத்தின் கொள்கைகளின்படி இந்தியாவின் மைய அரசு மட்டுமே தடுப்பூசி கொள்முதல் குறித்து நேரடியாக தங்களை தொடர்புகொள்ள முடியும் என்றும் கூறியுள்ளன. மாநில அரசுகளுடனோ, தனியார் நிறுவனங்களுடனோ பேச்சு நடத்த தங்கள் நிறுவனத்தின் கொள்கை அனுமதிக்காது என்றும் மாடர்னா, ஃபைசர் நிறுவனங்கள் தெரிவித்துவிட்டன. தேவைப்படும் தடுப்பூசிகளை மாநில அரசுகளே கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது அமெரிக்க நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி விற்பனை செய்ய முடியாது என்று கைவிரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்பட ஏராளமான மாநிலங்கள் சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ள நிலையில், ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய முக்கிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் இந்த முடிவு மாநில அரசுகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.



Tags : Madarna, USA , State Government, Vaccine Sales, American Vaccine Manufacturing Company
× RELATED 45 இந்தியர்கள் பலியான குவைத் தீ...