×

45 இந்தியர்கள் பலியான குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்த சோகம்: விமானம் மூலம் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு ஏற்பாடு

துபாய்: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களில் 45 பேர் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியானவர்களின் உடல்களை விமானம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து வர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 7 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 196 வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். இந்த கட்டிடத்தில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 49 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களில் 41 பேர் இந்தியர்கள் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

மேலும் சில இந்தியர்கள் காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது. வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் குவைத்திற்கு சென்று இந்தியர்களுக்கு உதவ பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன்பேரில், இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேற்று குவைத் சென்றடைந்தார். குவைத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசும் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணியை குவைத் அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். இதில், இறந்தவர்களில் 45 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என உறுதிபடுத்தப்பட்டது. 3 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவரின் உடல் அடையாளம் காணப்படவில்லை எனவும் அதிகாரிகள் கூறியதாக அரபு டைம்ஸ் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், குவைத் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அலி அல் யஹ்ஹாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு குவைத் அரசு தரப்பில் முழு உதவி வழங்கப்படும் என அமைச்சர் அப்துல்லா உறுதி அளித்தார்.

மேலும், தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்தியர்கள் 6 பேரை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பலியான 45 இந்தியர்களில் அதிகபட்சமாக 23 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியும், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமும் வழங்கப் படம் என்று கேரள முதல் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.

இதே போல, குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராமு (எ) கருப்பணன் ராமு, திருச்சியை சேர்ந்த ராஜூ எபினேசர், தஞ்சையை சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், கடலூரை சேர்ந்த சின்னதுரை, கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் வீராசாமி, செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரீப், சென்னை ராயபுரத்தை சேர்ந்த சிவசங்கரின் ஆகிய 7 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமை செயலகத்தில்தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்ததாக தமிழ்ச்சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. குவைத் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வது, இறந்தவர்களின் உடலை மீட்டு, தமிழகத்தில் உள்ள குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுரை கூறினார். அதேநேரம் பலர் அச்சப்படுகிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது. தமிழகத்தில் இருந்து வாழ்வாதாரத்தற்கு வெளிநாடு சென்றவர்களை தமிழக அரசு தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. அதேபோன்று குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் தமிழக அரசு முழுமையாக பாதுகாக்கும் என்று முதல்வர் கூறி உள்ளார்.

விபத்து பற்றி அறிந்துகொள்ள இந்தியாவிற்குள் ஒரு தொலைபேசி எண், குவைத் நாட்டில் தொடர்பு கொள்ள ஒரு தொலைபேசி எண் அறிவித்துள்ளோம். துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி விவரம் அறியலாம். ஆனால் சிலர் தொடர்ந்து அச்சப்பட்டார்கள். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் உள்ள 196 பேர் தவிர, மற்ற பகுதிகளில் உள்ள யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம் என அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
தமிழக அரசை பொறுத்தவரை உலகம் முழுவதும் வாழ்வாதாரத்திற்காக வெளிநாடு சென்றவர்களை பாதுகாக்க அயலக துறை உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் இதுபோன்ற சம்பவங்களை உற்று கவனித்து தூதரகம் மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளதாக பாராட்டு தெரிவித்தனர். வெளிநாடு தமிழர்கள் பற்றி தமிழகத்தில் ஒரு சின்ன செய்தி கேள்விப்பட்டதும், தமிழக அரசு சார்பில் சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை அணுகுகிறார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ள குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாஹ், இந்தியர்களின் உடல்களை சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல விமானத்தை தயார் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இந்தியர்களின் உடலை எடுத்து வர இந்திய விமானப்படை விமானமும் டெல்லியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் இன்று கொச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் உடல்கள் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

* குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் பலி.
* பலியானவர்களில் 45 பேர் இந்தியர்கள், 3 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டவர். ஒருவர் அடையாளம் தெரியவில்லை.
* இவர்களில் 7 பேர் தமிழர்கள்.
* 23 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்.
* உடல்கள் விமானத்தில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.

The post 45 இந்தியர்கள் பலியான குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்த சோகம்: விமானம் மூலம் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Kuwait ,fire ,Tamil Nadu government ,Dubai ,Indians ,Tamil Nadu ,
× RELATED குவைத்தில் இருந்து சென்னைக்கு...