×

ஊரடங்கு தடையை மீறி மலையாள டிவி சேனல் சென்னையில் ஷூட்டிங் ஈவிபி பிலிம் சிட்டிக்கு சீல் வைப்பு

சென்னை: மலையாள டிவி சேனல் சென்னையில் ஷூட்டிங் நடத்தி வந்த தகவல் வெளியானதால், ஈவிபி பிலிம் சிட்டிக்கு அதிகாரிகள் நேற்று அதிரடியாக சீல் வைத்தனர். சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள டிவி நிகழ்ச்சிக்கான பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இங்கு படப்பிடிப்பில் ஈடுபட்ட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனாலும் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நடிகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை படம் பிடித்து வந்தனர். தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவியதால், ஷூட்டிங் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும், படப்பிடிப்பில் ஊழியர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தார். ஆனால் தமிழக அரசின் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தொடர்ந்து ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வருவதும், படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தும், தொடர்ந்து ஷூட்டிங் நடத்தி வருவதாகவும் திருவள்ளூர் கலெக்டர் பொன்னையாவுக்கு தகவல் கிடைத்தது.

கேரளாவில் டிரிபிள் லாக்டவுன் இருப்பதால், அங்கு ஷூட்டிங் நடத்த முடியாது என்பதால் மலையாள டிவி சேனல் நிறுவனத்தினர் ஈவிபி பிலிம் சிட்டியில் தமிழக அரசின் தடையை மீறி ஷூட்டிங் நடத்தி வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து,  திருவள்ளூர் ஆர்டிஓ ப்ரீத்தி பார்கவி,  பூந்தமல்லி தாசில்தார் சங்கர், உதவி கமிஷனர் சுதர்சன் ஆகியோர் தலைமையில் மலையாள சேனல் ஷூட்டிங் நடைபெறும் அரங்கிற்கு சென்று அங்கு நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை செய்தனர். அப்போது ஷூட்டிங் நடத்தப்பட்டு வந்ததை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து, ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டனர். மேலும் அங்கு இருந்த நடிகர், நடிகைகளை வெளியேற்றினர். ஷூட்டிங் நடைபெற்ற அரங்கினை பூட்டி சீல் வைத்தனர். அருகில் இரு அறைகளில் படக்காட்சிகளை எடிட் செய்யும் பணிகளும் நடைபெற்று வந்தன. அந்த இரு அறைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.ஷூட்டிங் நடத்த அனுமதி அளித்த ஈவிபி பிலிம் சிட்டியின் நுழைவு வாயிலும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் ஷூட்டிங் நடத்திய நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவள்ளூர் கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே மலையாள டிவி சேனல், குமரி மாவட்டம் கருங்கல் அருகே  நேதாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசின் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவை மீறி கேரளாவில் இருந்து துணை நடிகர்கள், நடிகைகளை அழைத்து வந்து தொடர் ஒன்றுக்கு ஷூட்டிங் நடத்துவதாக மிடாலம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. கிள்ளியூர் தாசில்தார் ஜூலியட், வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ரெபின் மற்றும் கருங்கல் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் ஷெட் அமைத்து ஷூட்டிங் நடப்பது உறுதி செய்யப்பட்டது. 2 பெண்கள் உட்பட 22 பேர் அங்கு இருந்தனர்.
 
ஊரடங்கு உத்தரவை மீறி கொரோனா தொற்றை பரப்பும் வகையில் ஷூட்டிங் நடத்தியதாக  4 பேருக்கு தலா 5 ஆயிரம் வீதம் 20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்கள் வந்த மேக்சி கேப்  வாகனத்தையும் பறிமுதல் செய்து பின்னர், எச்சரித்து விடுவித்தனர். படப்பிடிப்பு குழுவினர் குளச்சல் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து மிடாலம், நேதாஜி நகர் பகுதியில் ஷூட்டிங் நடத்தியதும் தெரியவந்தது. கேரளாவில் டிரிப்பிள் லாக் டவுன் தொடருவதால் கடும் கெடுபிடி காரணமாக படப்பிடிப்பு குழுவினர் குமரி மாவட்ட பகுதியில் வந்து ஷூட்டிங் நடத்தியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.



Tags : EVP ,Film City ,Chennai , Malayalam TV channel seals shooting EVP Film City in Chennai in violation of curfew
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்