புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல், தேர்தல், கொரோனா கட்டுப்பாட்டுகளால் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற நாடக கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து செய்வது அறியாது திகைத்து வருகின்றனர். இதனால் மாற்றுப்பணிக்கு செல்லும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் நாட்டுப்புற நாடக கலை உலகில் புதுக்கோட்டை மாவட்டத்தை ஒதுக்கிவிட்டு செல்ல முடியாது.
அந்த வகையில் புதுக்கோட்டை நாடக கலைஞர்கள் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் உச்சம் தொட்டவர்கள் பலர் இருக்கின்றனர். இதேபோல் தற்போது தனியார் டிவி நிகழ்ச்சிகளில் செந்தில்கணேஷ், ஆக்காட்டி ஆறுமுகம், முத்துசிற்பி போன்ற தமிழக அளவில் பிரபலமான நாட்டுப்புற கலைஞர்கள் புதுக்கோட்டைக்கு பொறுமை சேர்த்துக்கொண்டு இருக்கின்றனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடக கலையில் சிறந்து விளங்கிய பெரியவர்கள் தற்போதும் நாடக கலையை விடமால் அந்த கலையை வளர்க்க தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின்போது கிராம மக்கள் வசதிக்கு ஏற்றார்போல் கிராமிய பாடல் நிகழ்ச்சி, வராலாறு, புராண கதைகள் கொண்ட நாடகங்கள், கரகாட்டங்கள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாட்டுப்புற மேடை கலைஞர்கள் தமிழக அளவில் முன்னணியாக இருந்து வருவார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்து 500 கலைஞர்கள் இருப்பார்கள். இவர்களை நம்பி ஒவ்வொரு குடும்பங்கள் இருந்து வருகிறது. இவர்கள் திருவிழா காலங்களில் தினசரி நிகழ்ச்சிக்கு செல்வதில் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தில் உள்ள செலவுகளை சமாளித்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் கஜா புயல் தாக்கியது. இதனால் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிள் நடைபெறவில்லை. இதனையடுத்து 2020ம் ஆண்டு கொரோன முழு ஊரடங்கு போடப்பட்டது. இதனால் முற்றிலும் நாடகம், பாடல் நிகழ்ச்சிகள் தடைபட்டது. நடப்பு ஆண்டில் கொரோனா 2ம் அலையின் காரணமாக அரசு சில ஊரடங்கு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில் கோயில் நிகழ்ச்சிக்களுக்கு திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது.
இதனால் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை கிராமத்தினர் நடத்த முன்வரவில்லை. இப்படி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி தற்போதைய 2021 ஆண்டு வரை தொடர்ந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்த தடைகள் ஏற்பட்டாதால், இந்த கலைகளை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த கலைஞர்கள், கலைஞர்களின் குடும்பங்கள் தொடர்ந்து வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டு வாழ வழியற்று போய் விழிபிதிங்கி இருந்து வருகின்றனர்.
பல கலைஞர்கள் தங்களின் குடும்பத்தை காப்பாற்றவும், குழந்தைகளின் தினசரி உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது கருவாடு விற்பனை செய்யவும், சாலை ஓரங்களில் கூழ் விற்பனை, இரவு காவலர் பணிக்கும் செல்கின்றனர். இப்படி தங்களுக்கு கிடைத்த வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியின்றி செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் இவர்களுக்கு அரசு முறையான நடவடிக்கை எடுத்து நாட்டுப்புற மேடை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
இது குறித்து கலைமாமணி ஆக்காட்டு ஆறுமுகம் கூறியது:
தொடர்ந்து கஜா புயல், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என தொடர்ந்து 4 ஆண்டுகள் எங்களால் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. இதனால் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நம்பி உள்ள எங்கள் கலைஞர்கள் மிகுந்த சிறமங்களை சந்தித்து வருகின்றனர். வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.
தினசரி வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான உணவுகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கிறோம். இதுவரை எங்கள் கோரிக்கையை காது கொடுத்து கூட கேட்கவில்லை. ஒவ்வொரு முறையும் நாங்கள் ஒன்று திரண்டு மனுக்களை தயார் செய்து அரசுக்கு கோரிக்கை மனு வழங்கி வருகிறோம்.
ஒரு மனுவுக்கு கூட எந்த பரிசீலனும் இல்லாமல் போய்விட்டது. எங்களுக்கு யாரும் உதவ முன்வர மறுகின்றனர். தமிழக அரசு ஒவ்வொரு கலைஞர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும். முறையான பதிவு முறைகளை ஏற்படுத்த வேண்டும். நாடக கலை என்றால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழக அளவில் சிறந்த பெருமையான இடம் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட கலைஞர்களின் வாழ்வாதரத்தை நினைக்கும்போது பெருத்த சோகம்தான் கண்முன்னே எஞ்சி நிற்கிறது என்றார்.
மன உளைச்சல் நீக்கும் கலை நிகழ்ச்சி
கிராமங்களில் மக்கள் வயல்களிலும், காடுகளிலும் உழைப்பவர்கள். இவர்களுக்கு என்று பொழுது போக்கு ஏதும் கிடையாது. நகரங்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கு போதிய வசதிகளும் இல்லை. இதனால் கிராமங்களில் திருவிழா நேரங்களில் இரவில் நடைபெறும் நாடகம், கரகாட்டம், கிராமிய பாடல் நிகிழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகளை தேடி தேடி போய் பொழுதை கழிப்பார்கள். தற்போது கலைநிகழ்ச்சிகள் தடைபட்டதால் கிராமத்தில் உள்ள விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்கள் பொழுதுபோக்கு இன்றி கடும் மன உளைச்சல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
கலைமாமணி விருதை திரும்ப ஒப்படைக்க முடிவு
எங்கள் கலைஞர்களின் வாழ்வை பார்த்து பெருத்த வேதனையில் இருந்து வருகிறேன். மாதம் மாதம் வீட்டு செலவுக்கு கூட பிறரின் உதவியை நாட வேண்டியுள்ளது. என்னால் எந்த உதவியும் செய்ய முடியாத நிலையிலும் நாட்டுப்புற, நாடக கலைஞர்கள் படும் வேதனையால் எனக்கு தமிழக அரசிடம் இருந்து தான் பெற்ற கலைமாமணி விருதினை திரும்ப ஒப்படைக்கும் முடிவை எடுத்துள்ளேன் என்று ஆக்காட்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
அழியும் கலைகள்
நாடக கலையில் புராண கதைகள் மக்களுக்கு நடித்து காண்பிப்பார்கள். இதில் பாட்டு நடனம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியிருக்கும். நாட்டுப்புற பாடலில் மக்களின் கஷ்டங்கள், காதல் உள்ளிட்டவற்றை பாடலாக பாடுவார்கள். மேலும் நாட்டில் அப்போது நடக்கும் பிரச்னைகள் குறித்து இவர்களே பாட்டு எழுதி பாடுவார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும். இதேபோல் கரகாட்ட நிகழ்ச்சியில் தவில், நாதஸ்வரம் மற்றும் கராகாட்ட நடனம் உள்ளிட்டவைகளுக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. தொடர்ந்து ஆண்டு கணக்கில் இந்த நிகழ்ச்சிக்கு தடைபட்டால் குடும்பத்தை காப்பாற்ற இந்த கலைகளில் இருந்து வெளியேறுவார்கள். இதனால் கலைகள் அழியும் நிலைக்கு சென்றுள்ளது.
