×

துவரங்குறிச்சி பழைய பாளையத்தில் ஜல்லிக்கட்டு; 700 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்: 250 வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்

 

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி பழைய பாளையத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள பழையபாளையத்தில் ஸ்ரீ பட்டத்தளச்சி அம்மன், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்கள் திருவிழாவையொட்டி பழையபாளையம், அழகாபுரி, சத்திரப்பட்டி, தாதப்பட்டி ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு கோயில் முன்பு உள்ள திடலில் இன்று நடந்தது.

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டன. 250 வீரர்கள் வந்திருந்தனர். காளைகள், வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு போட்டி துவங்கியது. வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். போட்டியை மருங்காபுரி தாசில்தார் பால காமாட்சி கொடியசைத்து துவக்கி வைத்தார். வாடிவாசலிலிருந்து முதலில் கோயில் காளைகளும், அதனை தொடர்ந்து மற்ற காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் ஓடாமல் நின்று விளையாடி வீரர்களை தெறிக்க விட்டது. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசு, கட்டில், சேர், கடிகாரம், அண்டா, குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிகட்டை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். மணப்பாறை டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் சுமார் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Jallikattu ,Palayam ,of ,Dhuvarankurichi ,Palayam of Dhuvarankurichi ,Sri Pattathalachi Amman ,Sri Varadaraja Perumal ,Trichy district ,Alagapuri ,Chathirapatti ,Dadapatti… ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்தியநாத...