- மற்றொரு திருவிழா
- நெல்லையப்பர் கோயில்
- தேரோட்டமா
- நெல்லை
- சிவன் கோயில்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பந்தகல் நாடும் வைபவம்
நெல்லை: தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகள் பந்தக்கால் நடும் வைபவத்துடன் இன்று கோலாகலமாகத் தொடங்கின. அடுத்த மாதம் 28ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடந்தாலும் ஆனி மாதம் நடக்கும் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவின் சிகர நிகழ்வாக ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி தேர் உள்ளிட்ட 5 தேர்கள் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி தரும் நிகழ்வு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவைக் காணப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க ஆனித் திருவிழாவின் தொடக்கப் பணிகளை உணர்த்தும் பந்தக்கால் நடும் நிகழ்வு இன்று காலை நடந்தது. இதற்காக அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடந்தன. விநாயகருக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு பந்தக்காலுக்குப் புதிய வஸ்திரம் அணிவித்து தீபாராதனை காட்டும் நிகழ்வு நடந்தத. மேள தாளங்கள் முழுங்க ஊர்வலமாக எடுத்து வந்த பந்தக்காலைக் கோவில் வாசல் மண்டபத்தில் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பந்தக்காலுக்கு மஞ்சள் மற்றும் பால் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நவதானியங்களைத் தூவி மகா தீபாராதனையுடன் பூஜை நடந்தது.
அதிகாலையிலேயே திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பந்தக்கால் நட்டதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அலங்காரப் பத்தல் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. அத்துடன் தேர்ச் சீரமைப்பு மற்றும் தேருக்கு தேவையான பொருட்களை உருவாக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. வருகிற 2ம் தேதி விநாயகர் கொடியேற்றம் நடக்கிறது அதைத்தொடர்ந்து ஆனித்தேர் திருவிழா அடுத்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றிலிருந்து 9வது நாளான 28ம் தேதி சிகர நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடக்க உள்ளது.
