சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,955 லாட்ஜ், 3,862 திருமண மண்டபங்களில் போலீஸ் சோதனை: குற்றப் பின்னணியில் உள்ள 67 ரவுடிகள் கைது

சென்னை: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்களை கைது செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 2,955 லாட்ஜி, 3,862 திருமண மண்டபங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், குற்றப்பின்னணி உள்ள 67 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி பிரசாரம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் ஈடுபட்ட தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளியூர் ஆட்கள் தொகுதிக்குள் தங்க கூடாது என்றும், அப்படி தேர்தல் ஆணையம் உத்தரவை மீறி யாரேனும் தங்கினால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைதொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் தொகுதிகளுக்கு தொடர்பு இல்லாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக போலீசார் நேற்று முன்தினம் 2,955 லாட்ஜி, 3,862 திருமண மண்டபங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி தங்கி இருந்த நபர்களை போலீசார் கடுமையாக எச்சரித்தும், அவர்களிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டும் அனுப்பி வைத்தனர்.

இந்த சோதனையில் வாக்குபதிவின் போது கலகத்தை ஏற்படுத்தும் வகையில் தங்கி இருந்த கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 67 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 48 ரவுடிகள் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் இனி எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என்று நன்னடத்தை பினையாணை பத்திரத்தில் 2 நபர்கள் உத்தரவாதத்துடன் கையெழுத்திட்டனர். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 67 ரவுடிகளில் 48 ரவுடிகளை போலீசார் விடுவித்தனர். இந்த சோதனை தொடரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>