தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் பிடிச்ச சின்னத்துக்கு போடு ஓட்டு பிடிக்கலைன்னா இருக்கு நோட்டா

நெல்லை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடக்கிறது. இதற்காக பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகின்றன. இந்நிலையில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் 21 வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும் அந்த வீடியோவில், ஒவ்வொரு ஓட்டும் முக்கியம், நமது ஓட்டு தான் நாட்டின் தலையெழுத்தை மாற்றும். அலட்சியம் வேண்டாம். மை அவசியமானது. எனவே உங்களுக்கு பிடித்தமான சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள். ஓட்டுப் போட பிடிக்கலைன்னா நோட்டாவில் போடுங்க எனக் கூறும் வீடியோ இடம் பெற்றுள்ளது.

மற்றொரு வீடியோவில் இளம்பெண் ஒருவர் சமீபத்தில் முகவரி மாறி வந்து விட்டோம், ஓட்டு எங்கே உள்ளது எனத் தெரியவில்லை என அப்பாவியாக கூறுகிறார்.

அவரிடம் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள ‘1950’ என்ற எண்ணில் கேட்குமாறு கூறுகிறார். அந்த எண்ணிற்கு பேசும் பெண்ணிடம், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தேர்தல் ஆணைய பிரதிநிதி கேட்க அந்தப் ெபண் தெரியாமல் விழிக்கிறார். உடனே அவருடைய பெயர், தந்தை பெயரை கேட்டுக் கொள்ளும் தேர்தல் ஆணைய பிரதிநிதி அவரது தொகுதி, வாக்குச்சாவடி, வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை தெரிவிக்கிறார். மேலும் வாக்காளர் அடையாள அட்டை இல்லையே என அந்தப் பெண் வினவ வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள 12 ஆவணங்களை காட்டி ஓட்டுப் போடலாம் என்கிறது தேர்தல் ஆணையம்.

இதுபோன்று 21 வாக்காளர் விழிப்புணர்வு வீடியோக்களை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்கள் செய்தி, மக்கள் தொடர்பு துறையின் வீடியோ வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு பிரசாரம் செய்து வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வாகன பிரசாரத்தை நெல்லை கலெக்டர் விஷ்ணு துவக்கி வைத்தார்.

Related Stories:

>