டெல்லி: பாஸ்ட் டேக் முறையால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் நடைமுறை கடந்த 15ம் தேதி அமலுக்கு வந்தது. பாஸ்ட் டேக் இல்லாதவர்களிடம் அபராதமாக இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனிடையே டெல்லியில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகளுக்கான மதிப்பீடு மற்றும் தரவரிசையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்க பாஸ்ட் டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதாக கூறினார்.
பாஸ்ட் டேக் கட்டண நடைமுறை கட்டாயமாக்கப்பட்டிருப்பதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், மொத்த சுங்கச்சாவடிகளில் 80 சதவீதம் அளவுக்கு காத்திருப்பு நேரம் பூஜ்யம் என்ற அளவில் உள்ளதாகவும், பாஸ்ட் டேக் கட்டாயம் என்ற அறிவிப்பினை தொடர்ந்து சுங்கக்கட்டண வசூல் 80 சதவீதத்தில் இருந்து 93 சதவீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். பாஸ்ட் டேக் தினசரி வசூல் 140 கோடி ரூபாயை எட்டியிருப்பதாகவும் நிதின் கட்கரி கூறினார்.