×

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் மகாராஷ்டிராவின் அமராவதியில் ஊரடங்கு: 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் 6 மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கிடையே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவின் அமராவதியில் ஒரு வார ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் பல மாநிலங்களில் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த 6 மாநில அரசைகளையும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 4 வார கணக்கெடுப்பில் மகாராஷ்டிரா, கேரளாவில் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பஞ்சாப், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசத்தில் தினசரி பாதிப்பு கூடிக் கொண்டே உள்ளது. எனவே, இம்மாநிலங்கள் தினசரி ஆர்டி- பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடுகளை மாநிலங்கள் கண்டிப்பாக அமல் படுத்த வேண்டும் .கண்காணிப்பு பணிகளில் மாநில நிர்வாகங்கள் தீவிரமாக இருக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் இன்று இரவு 8 மணி முதல் ஒருவாரத்திற்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அமைச்சர் யசோமதி தாகூர் நேற்று அறிவித்தார். அத்திய
வாசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறியுள்ள அமைச்சர், கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்கத் தவறினால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். தடுப்பூசி வேகம்: இதே போல அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டுமென மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. குறைந்தபட்சம் வாரத்தில் 4 நாட்கள் தடுப்பூசி போடப்பட வேண்டுமென அனைத்து மாநில அரசுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

* நோய் எதிர்ப்பு சக்தி பெற்றாலும் ஆபத்து
எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் சந்தீப் குலேரியா அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் திறன் கொண்டது. இந்த புதிய வகை வைரஸ், தடுப்பூசி மூலமாகவோ அல்லது ஏற்கனவே வைரஸ் தாக்கி அதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி பெற்றிருந்தாலும் அவர்களை மீணடும் தாக்கும் வல்லமை கொண்டவை. எனவே மீண்டும் தடுப்பு நடவடிக்கையை நாம் தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பூசிகள் இன்று நமக்கு மிகவும் அவசியமானவை’’ என்றார்.

* புனேவில் இரவு ஊரடங்கு
புனேயில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து அங்கு மீண்டும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணிவரை அத்தியாவசியமற்ற செயல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், தனியார் பயிற்சி நிலையங்கள் ஆகியவை வரும் 28ம் தேதிவரை விடுமுறை அளிக்கவும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Coronation ,Amravati ,Maharashtra ,Central government , Amravati, Maharashtra: Curfew on the rise: Central government warns 6 states
× RELATED மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி