×

சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் முறையாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்: ஒன்றிய உள்துறை செயலாளர் வழங்கினார்

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தின் (சிஏஏ) கீழ் முதல் முறையாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து, கடந்த 2014 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன்பாக, மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாத இந்து, சீக்கியர், ஜெயின், பவுத்தம், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான குடியுரிமை திருத்த சட்டம் 2019ம் ஆண்டு டிசம்பரில் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில், 4 ஆண்டு தாமதத்திற்குப் பிறகு கடந்த மார்ச் 11ம் தேதி சட்ட விதிகள் அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து சிஏஏ சட்டம் அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், சிஏஏ சட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க தனியாக இணையதளம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் விண்ணப்பம் செய்த 14 பேருக்கு பல கட்ட ஆய்வுகளுக்குப் பின் இந்திய குடியுரிமை சான்றிதழ்களை ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நேற்று வழங்கியதாக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. குடியுரிமை சான்றிதழ் பெற்றவர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் மிஸ்ரா வாழ்த்து தெரிவித்தார். இது ஒரு வரலாற்று நாள் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘நாடு சுதந்திரம் அடைந்த போது அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களின் பல ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மோடியின் உத்தரவாதம், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம்’’ என கூறி உள்ளார். சிஏஏ சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2019ல் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. இச்சட்டம் பாரபட்சமானது என பல தரப்பினர் குற்றம்சாட்டினர். மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட தலைவர்கள் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம் என கூறி வரும் நிலையில், 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் முறையாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்: ஒன்றிய உள்துறை செயலாளர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Union Home ,New Delhi ,Pakistan ,Afghanistan ,Bangladesh ,Dinakaran ,
× RELATED அதிகாரிக்கு வந்த மர்ம இமெயில் உள்துறை...