×

பெண்களை வதைக்கும் ஒடுக்குமுறை அரசு இது: வாசுகி, மத்திய குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மானிய விலையில் சிலிண்டர் பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் மானியம் தனியாக கொடுத்துவிடுகிறோம், பணம் செலுத்தி சிலிண்டரை பெற்றுக்கொள்ளுங்கள் என மத்திய அரசு கூறியபோதே பல அமைப்புகள் இது சரியானது கிடையாது என்று கூறினோம். மானியம் கொடுப்பீர்கள் என்பதில் என்ன உத்தரவாதம் இருக்கிறது என்று கேட்டோம். மானியத்திற்காக காத்திருக்க முடியாது இதில் பல்வேறு சிக்கல்கள் எழும் எனவும் கூறினோம். எனவே, மானிய விலை சிலிண்டரை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றோம். தற்போது, நாங்கள் நினைத்தது போலவே தனியாக கொடுக்கப்படும் மானியமும் நின்றுவிட்டது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை முற்றிலும் வெட்டுவது என்ற முடிவோடு தான் ஒவ்வொரு அடியாக விலை ஏற்றம் உள்ளிட்டவற்றை கொண்டு வருகிறார்கள். உலக நாடுகளிலேயே பெட்ரோலிய பொருட்கள் மீது அதிக வரி விதிப்பது இந்தியா தான். கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் இங்கே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ததில் கூட முழுமையாக செலவு செய்யாத சில துறைகளும் உள்ளது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு ஒதுக்கிய தொகையை கூட சரியாக செலவு செய்வது கிடையாது.

ஆனால், பெரு நிறுவனங்களுக்கு அவர்கள் போட்ட வரி வருவாயில் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே வசூல் செய்துள்ளார்கள். பெட்ரோலிய பொருட்கள் மீது தான் அதிக வருவாய் கிடைக்கிறது. கார்ப்ரேட்டுகள் மீது போடப்பட்ட வரியில் 4 லட்சம் கோடி தான் வசூல் செய்துள்ளார்கள். ஆனால், எளிய மக்களுக்கு போடப்படும் வரி என்பது எதிர்பார்த்ததை விட அதிகமாகவே உள்ளது. இவர்களுடைய கொள்கை, திட்டம் என்பது சாதாரண மக்களுக்கு சாதகமாக இல்லை என்பது தான் உண்மை. மானிய வெட்டு என்பது உலகமய கொள்கையின் முக்கிய அம்சம். அதை தான் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

எனவே, இலவச கேஸ் இணைப்பு கொடுக்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பதில் ஒரு புண்ணியமும் கிடையாது. கிராமப்புறங்களில் 100 நாள் வேலை தான் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. இதற்காக இவர்கள் பட்ஜெட்டில் ஒதுக்கிய திருத்தப்பட்ட மதிப்பு என்பது கடந்த ஆண்டை விட பல்லாயிரம் குறைவு. ஆனால், 100 நாட்களை 200 நாளாக மாற்ற வேண்டும் என்று தான் கோரிக்கை வருகிறது. ஆனால், இருக்கிற நாட்களையும் குறைக்க தான் திட்டமிடுகிறார்கள். நிரந்தர வேலை என்பது முறைசாரா வேலையாக மாற்றப்படுகிறது. இரண்டாம் தர பிரஜையாக கருதப்படுகிற, வீட்டு பொறுப்புகளை கையில் வைத்திருக்கக்கூடிய பெண்களுக்கு இது கூடுதல் அடியாக இருக்கிறது. இதை எதிர்த்து கேள்வி கேட்க சாலைகளில் வந்து போராடினால் கைது செய்யப்படுகிறார்கள். ஒட்டுமொத்தமாக ஒடுக்குமுறை அம்சத்துடன் தான் இந்த அரசு சென்றுகொண்டிருக்கிறது.

Tags : Vasuki ,Central Committee ,Marxist Communist Party , This is the oppressive government that oppresses women: Vasuki, Central Committee member, Marxist Communist Party
× RELATED தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...