×

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வருகை: 9 மாதம் ராணுவ சிறப்பு பயிற்சி பெற்றவை

 

சென்னை, மே 26: சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலை கண்டுபிடிப்பதற்கு விமான நிலைய சுங்க துறையிடம் ஏற்கனவே ஓரியோ என்ற இரண்டு வயது ஆண் மோப்ப நாயும், ஓர்லி எனப்படும் இரண்டு வயது பெண் மோப்ப நாயும், பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. ஆனாலும் சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

இந்த இரண்டு மோப்ப நாய்கள் மூலம், போதைப் பொருட்களை முழுமையாக கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே தற்போது கூடுதலாக ஸ்நோ பாய், ராக்கேஷ் எனப்படும் மேலும் இரண்டு மோப்ப நாய்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறை பகுதிக்கு கடத்தல் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க பயன்பாட்டுக்கு புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருளை கடத்தலை கண்டுபிடிக்க 4 மோப்ப நாய்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த மோப்ப நாய்களின் முக்கியமான பணிகள் போதைப் பொருட்களை கண்டுபிடிப்பது மட்டுமே. அதற்காக இந்த மோப்ப நாய்களுக்கு இந்திய ராணுவ பயிற்சியகமான அட்டாரி வாகா பார்டரில் சிறப்பு பயிற்சிகள் 9 மாதங்கள் கொடுக்கப்பட்டு, சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 4 மோப்ப நாய்களும் லேபர் டாக்ஸ் வகையை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலக வளாகத்தில், இந்த நான்கு மோப்ப நாய்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. அப்போது சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய்கள் பிரிவை மேலும் அதிகரிக்கும் திட்டம் உள்ளது என்றும், தற்போது போதைப் பொருட்களை கண்டுபிடிப்பதற்காக இதேபோல் 4 மோப்ப நாய்கள் பயன்படுத்துவது போல், வெடிபொருள் போன்ற அபாயகரமான பொருட்களை கண்டுபிடிப்பதற்காகவும், கூடுதல் மோப்ப நாய்கள் விரைவில், ராணுவ பயிற்சி பெற்று, சென்னை விமான நிலைய மோப்ப நாய் பிரிவில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வருகை: 9 மாதம் ராணுவ சிறப்பு பயிற்சி பெற்றவை appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Airport Customs ,Oreo ,
× RELATED மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்