×

கோயிலைச் சுற்றி குப்பைக் கழிவுகள்: -பெர்ரி, வழக்கறிஞர், காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் என்றாலே பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில்கள்தான் அனைவருக்கும் நினைவில் தோன்றும். ஆனால், அந்தக் கோயிலைச் சுற்றி ஏராளமான குப்பைக் கழிவுகள் குவிந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. இதனால் அதிகாலையில் கோயில் மாடவீதிகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் உள்ளூரைச் சேர்ந்த வயதானவர்கள், இளைஞர்கள் என அனைவரும் மிகவும் அவதிப்படுகின்றனர்.

அதுவும் தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்கு வருகின்றனர். அதனால் தினந்தோறும் ஏராளமான குப்பைக் கழிவுகள் சேர்ந்து விடுகிறது. இதனை தினமும் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காஞ்சிபுரம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரிப்பால் பஸ் நிலையம் முதல் மேட்டுத்தெரு மற்றும் ரங்கசாமி குளம் வரையில் டூவீலரில் செல்வதே சிரமமாக உள்ளது. எனவே, போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மலைக்கிராம வாக்குச்சாவடினா மண்டை காய்ச்சல்
தமிழகத்தில் தேனி, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் மலைக்கிராமங்கள் அதிகளவு உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் மின் வசதி இல்லை. செல்போன் சிக்னலே சுத்தமாக கிடைக்காது. சாலை வசதியும் கிடையாது. வாக்கு பெட்டிகள், இயந்திரங்களை கழுதைகளில் வைத்துத்தான் கொண்டு செல்ல வேண்டும். வாக்குப்பதிவு இயந்திர பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றி பிரச்னையே இல்லாமல் தேர்தலை நடத்துவதற்குள் அதிகாரிகள் கதி அதோகதி.
அடுத்து வயித்து பிரச்னை... ஒரு டீ குடிக்க குறைந்தது 1 கிமீ, அதிகபட்சம் 2 கிமீ நடக்கணுமாம்.

சாப்பாடும் உரிய நேரத்துல வராதாம். சில நேரம் அரசியல் கட்சியினர் டீ, வடை வாங்கிட்டு வருவாங்களாம். ஆஹா... என ஆர்வத்துல வாங்கி சாப்பிட்டால், நீ அந்த கட்சிக்கு ஆதரவாளரா என மேலதிகாரி டார்ச்சர் பண்ணிடுவாராம். வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக ஒப்படைப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்திடுமாம். வாக்குப்பதிவின்போது அசம்பாவிதம் ஏற்பட்டாலோ, அங்கே தங்கும்போது பிரச்னை ஏற்பட்டால் செல்போனை உயரமான இடத்துக்கு கொண்டு போய்தான் பேச வேண்டியிருக்குமாம்.

* குக்கர்காரரின் ரகசிய திட்டம்
மக்களவை தேர்தலுக்கு பின்னர் எல்லாமே தலைகீழ். குக்கர்காரரின் கட்சியில் சீட்டுக் கட்டு போல் ஒவ்வொன்றாக சரிந்து விட்டது. மக்களவை தேர்தலில் குக்கர்காரரின் வெயிட்டை எடை போட்ட இலை கட்சியின் பிரபலங்கள் மீண்டும் இலை தலைமையுடன் சென்று ஒட்டிக் கொண்டனர். சமீபத்தில் நெல்லை வந்திருந்த குக்கர்காரர் கோயில்களுக்கு ஒரு டிரிப் அடித்தார். அப்போது தென் மாவட்டங்களில் இருக்கும் அதிருப்தியாளர்களை சரிகட்டி சிறைப்பறவையை சந்திக்க வைக்கும் வேலையை கட்சியின் முக்கிய நபர்களிடம் ஒப்படைத்துள்ளாராம். அதன் பேரில் தான் முதல் கட்டமாக பாலியல் வழக்கில் சிக்கிய கடைக்கோடி மாவட்டத்தின் முன்னாள் எம்எல்ஏ சந்திப்பு நிகழ்ந்ததாம். வரும் நாட்களில் இதுபோன்ற சந்திப்புகள் அதிகம் இருக்குமாம். குறிப்பாக ஜெயலலிதா பிறந்த நாளன்று தங்களது வெயிட்டை காண்பிக்க மெகா திட்டத்தை குக்கர்காரர் கையில் வைத்துள்ளராம். அன்று முக்கிய சந்திப்புகள் இருக்குமாம்.

*  அன்று ஓட்டுக்கு கூவியவர்கள் இன்று கூரை வீட்டில்
எம்ஜிஆர் இறந்த பின் நடந்த 1989 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தேனி மாவட்டம், போடி சட்டசபை தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். இவரை ஜெயிக்க வைப்பதற்காக இரவு நேரங்களில் ஓட்டுக் கேட்க செல்லும் அதிமுகவினர் ஒரு வித்தியாச முறையை கையாண்டுள்ளனர். சேவல் சின்னத்தை மக்களிடம் பதிய வைப்பதற்காக ஒவ்வொரு வீடாக சென்று, ‘‘சேவல் கூவி பொழுது விடிவது போல, ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுங்க... உங்கள் தொகுதிக்கு விடிவு காலம் பிறக்கும். கொக்கரக்கோ... கொக்கரக்கோ...’’ என சேவல் கூவுவது போல் கூவி ஓட்டு கேட்டுள்ளனர்.

சேவல் கூவி பொழுது விடிந்ததோ இல்லையோ... ஜெயலலிதாவுக்கு வெற்றி கிடைத்தது. அவர் வாழ்க்கை கோபுரமானது. ஆனால், அன்று அவருக்காக கூவியவர்கள் எல்லாம் இன்று கூரை வீட்டில் வசிக்கிறார்களாம். வசை பாடிய தேனி மாவட்ட முக்கிய ‘விவிஐபி’ உட்பட பலர், வசதி வாய்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அது கூட பிரச்னையில்லை. அன்று கூவிய எங்களை பார்த்து, ‘‘கொக்கர கொக்கரக்கோ...’’ என எதிர் வேலை பார்த்தவர்கள், ஏளனம் செய்வதைத்தான் ஏத்துக்க முடியல என அதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் கண்ணீர் வடிக்கின்றனர்.

Tags : Perry ,Kanchipuram , Garbage around the temple: -Perry, Lawyer, Kanchipuram
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...