×

சீர்த்திருத்த திருமணங்கள் மூலம் சமுதாயத்தில் சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேச்சு

மைசூரு: சீர்த்திருத்த திருமணங்கள் மூலம் சமுதாயத்தில் சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூருவில் உள்ள சுத்தூர் மடத்தில் நடைபெற்ற ஏழை ஜோடிகள் மற்றும் கலப்பு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறுகையில், ஆண்டுதோறும் சுத்தூர் மடத்தில் நடைபெற்று வரும் ஏழை மற்றும் கலப்பு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமையாக உள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்த திருமண நிகழ்ச்சியை மடாதிபதி சித்தேஸ்வர சுவாமிஜி மிகவும் எளிமையாக நடத்துகிறார்.

சுத்தூரு என்னுடைய தொகுதி. தற்போது என் மகன் எம்.எல்.ஏவாக இருந்தாலும் இது என்னுடைய தொகுதிதான். இந்த தொகுதியில் வெற்றி பெற்றுதான் நான் முதல்வராக ஆனேன். வருணா தொகுதி மக்களை நான் எப்போதும் மறக்க முடியாது. எனக்கு மிகவும் பிடித்தமான மடங்களில் சுத்தூர் மடமும் ஒன்று. இன்றைய சூழலில் திருமணங்கள் எளிமையாக நடத்தப்பட வேண்டும். சாதி கலப்பு திருமணத்தை அனைவரும் வரவேற்க ேவண்டும். சாதி கலப்பு திருமணத்தால்தான் இந்த சமூகத்தை மாற்ற முடியும். சுமார் 850 வருடங்களுக்கு முன்பே சாதி கலப்பு திருமணத்தை பற்றி பசவண்ணர் குறிப்பிட்டுள்ளார்.

பசவகல்யாணில் பசவண்ணர் மண்டபம் அமைக்க எனது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அது சாத்தியமில்லாமல் போனது. தற்போது மாநில அரசு மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த பணிகள் விரைவில் முடிக்க வேண்டும்.சுத்தூர் மடம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இடம். இந்த சீர்த்திருத்த திருமணங்கள் மூலம் சமுதாயத்தில் சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்’’ என்றார்.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.டி.சோமசேகரும் சித்தராமையாவும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் கைகூப்பி வணக்கம் தெரிவித்து கொண்டனர்.

Tags : Chidramaiah , Mysore, Castes, Chitramaiya, Speech
× RELATED அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தேசவிரோத...