×

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அடிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் :மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், புதுக்கோட்டையில் நடைபெற்ற இரண்டு திருமண விழாக்களில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.

கழக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் திரு. த.சந்திரசேகரன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

நம்முடைய புதுக்கோட்டை சந்திரசேகரன் இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் அவருடைய அன்பு மகள் டாக்டர். சங்கத்தமிழ், அதேபோல மணமகனாக வீற்றிருக்கும் டாக்டர். பரத் முத்துதங்கம் ஆகியோரின் மணவிழா நிகழ்ச்சியை இன்றைக்கு உங்கள் அன்பான வாழ்த்துகளோடு நடத்திவைக்கும் ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன்.

இங்கு எனக்கு முன்னால் உரையாற்றியவர்கள் அத்தனை பேரும் நேரமின்மையால், சுருக்கமாகச் சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முன்பு நான் ஒன்று சொல்ல விரும்புவது பல்வேறு பணிகளுக்கு இடையே நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இதுவே சந்திரசேகருக்கு நான் தந்திருக்கும் பெரும் மதிப்பீடு என்று எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

என்னைப் பொறுத்தவரையில், இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதற்காக அவர் எந்த அளவிற்கு பெருமைப்படுகிறாரோ, அதைவிட நான் அதிகமாக பெருமைப்படுகிறேன் என்று சொன்னால் நிச்சயம் அது மிகையாகாது.

காரணம் அவர்களைப் பொறுத்தவரையில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் மாணவர் அணியின் துணை அமைப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த போது, அப்போது இளைஞர் அணிக்கு புதுக்கோட்டைக்கு அவரை அமைப்பாளராகத் தேர்வு செய்து அந்தப் பொறுப்பை அவரிடத்தில் ஒப்படைத்தோம்.

அவர் மாவட்ட அமைப்பாளராக இருந்து இந்த மாவட்டத்தின் இளைஞர் அணியை எந்த அளவிற்கு கம்பீரமாக வளர்த்து வந்திருக்கிறார் என்பதை நான் அனுபவரீதியாக, நேரடியாக பார்த்தவன்.

பல்வேறு அணிகளை சார்ந்திருக்கும் நிர்வாகிகள் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறீர்கள். இதை யாரும் தவறாக கருதிவிடக்கூடாது. கருத மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்றைக்கு கழகத்திற்கென்று இருக்கும் அணிகளில் மிகச் சிறந்த அணி, எந்த அணி என்றால் அது இளைஞரணி தான் என்பதை யாரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது.

எல்லாவற்றையும் விட சிறப்பாக பணியாற்றும் வாய்ப்பு இந்த அணிக்கு இருக்கிறது. அதனால்தான் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஒரு சிறப்பான அணியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அந்த அணி இன்றைக்கு பெயர் பெற்றிருக்க காரணம், தனிப்பட்ட ஸ்டாலின் அல்லது தனிப்பட்ட நிர்வாகிகள் என்று நான் சொல்ல மாட்டேன்.

சந்திரசேகரன் போன்ற உண்மையான தொண்டர்கள் அந்த அணியில் இணைந்து பணியாற்றிய காரணம்தான் என்பதை நாம் மறக்க முடியாது. அதற்கு பிறகு அவர் மாவட்டப் பொறுக்குழு உறுப்பினராக - மாவட்டப் பொருளாளராக - துணைச் செயலாளராக - அவைத் தலைவராக தற்போது சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராக வளர்ந்துவிட்டார்.

எல்லா பொறுப்புகளையும் வகித்து விட்டார். இனி அவர் எந்தப் பதவியும் எதிர்பார்க்க மாட்டார். இதைச் சொல்வதால் அவர் கோபித்தும் கொள்ள மாட்டார். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் தேர்தல் வருகிற போது எல்லோருடனும் நேர்காணல்களிலும் கலந்து கொள்ளக் கூடியவர்.

ஆனால் கலைஞர் அவர்கள், இந்த முறை உனக்கு அல்ல, மறுமுறை பார்க்கலாம் என்று சொன்னால் அதை அப்படியே கேட்டுக்கொண்டு கலைஞருடைய பேச்சுக்கு கட்டுபட்டு நடக்கக் கூடியவர் தான் நம்முடைய சந்திரசேகரன் என்பதை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

அப்படிப்பட்டவர் இல்லத்தில் இன்றைக்கு இந்த மணவிழா நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் சுயமரியாதைத் திருமணமாக நடந்து கொண்டிருக்கிறது என்று அண்ணன் சுப.வீ அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள். இன்று அவருக்கும் திருமண நாள்.

மணமக்களை வாழ்த்தும் போது, அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சொன்னார், சுயமரியாதைத் திருமணம் எவ்வாறு நடந்தது? அதை எப்படி அறிஞர் அண்ணா அவர்கள் சட்டமாக்கி தந்தார்கள்? என்பதைப் பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

சுயமரியாதைத் திருமணம் மட்டுமல்ல. காணொலிக் காட்சிகளிலும் திருமணத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. ஏனென்றால் கொரோனா காலமாக இருக்கின்ற காரணத்தினால் அதிகமான கூட்டம் கூட கூடாது. கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்பதனால் இப்போது காணொலிக் காட்சி மூலமாக கூட நான் இந்த 9 மாதத்திற்குள் 100க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி முடித்து விட்டேன்.

அந்த பணியும் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் 3 மாதத்தில் நாம் தேர்தலை சந்திக்கப்போகிறோம். நாம் தான் உறுதியாக 3 மாதத்தில் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் வந்து அமரப்போகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு அடிப்படையாக பிரச்சார வியூகத்தை அமைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாம் அந்தப் பயணத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பயணத்தை நடத்தினோம். இப்போது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் அந்த பயணத்தை நான் நடத்திக் கொண்டிருக்கிறேன். 234 தொகுதிகளிலும் மக்கள் குறைகளை கேட்க வேண்டும் என்ற நிலையில் அந்தப் பயணத்தை நடத்தத் திட்டமிட்டு அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முதல்கட்டமாக 34 சட்டமன்ற தொகுதிகளை முடித்திருக்கிறோம். 2வது கட்டத்தில் இன்று மாலையோடு சிவகங்கை மாவட்டம் - திருப்பத்தூரில் நிறைவு பெறுகிறது. இன்று மாலையுடன் 37 சட்டமன்ற தொகுதிகள் முடிவடைகிறது. 71 தொகுதிகளை 2 கட்டத்தில் நாங்கள் முடித்திருக்கிறோம்.

3ஆம் கட்ட பயணம் 12ஆம் தேதி புறப்பட இருக்கிறது. 234 தொகுதிகளிலும் நான் இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு என்ன காரணம் என்றால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 200 இடங்கள் இலக்கு என்று சொன்னேன். அது தவறு. 234 இடங்களிலும் நாம் வெற்றி போகிறோம் என்பதற்காகத்தான் இந்த 234 தொகுதிகளிலும் மக்கள் குறைகளைக் கேட்கும் அந்தப் பணிகளில் நாம் ஈடுபட்டிருக்கிறோம்.

எதற்கு என்றால், இன்றைக்கு நாட்டில் பழனிசாமி அவர்கள் தலைமையில் ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் எப்படி முதலமைச்சர் ஆனார் என்று சொன்னால் அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். உடனே திருப்பி கேட்பார், “கலைஞர் எப்படி ஆனாரோ அதே போல தான் நானும் ஆனேன்” என்று சொல்வார். அந்தப் பிரச்சினைக்குள் நான் போகவில்லை.

நீங்கள் எப்படி முதலமைச்சர் ஆனீர்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் தவழ்ந்து வந்தது உண்மையா? இல்லையா? இதுதான் நான் கேட்கும் கேள்வி. அதை எல்லோரும் சமூக வலைதளங்களில் பார்த்தார்களா? இல்லையா? இதுதான் என்னுடைய கேள்வி. அதை இல்லை என்று மறுங்கள். நான் அதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.

எனவே அவ்வாறு தவழ்ந்து சென்று முதலமைச்சராக உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது? சசிகலா அம்மையார் பெங்களூரிலிருந்து புறப்பட்டு விட்டார். தொலைக்காட்சியில் பார்த்து விட்டுத்தான் வருகிறேன். கொடியோடு பறந்து வந்து கொண்டிருக்கிறார். என்ன நடக்கப் போகிறது? என்று தெரியவில்லை. ஆனால் நடக்க வேண்டியது நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதுதான் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை.

இன்னொரு திருமணத்திற்கு குறித்த நேரத்தில் சென்று சேர்ந்தாக வேண்டும். அதனால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. சந்திரசேகரன் அவர்களை பாராட்டினால், வெளிப்படையாகச் சொல்கிறேன் என்னையே நான் பாராட்டிக் கொள்வதாக அமைந்து விடும் என்பதால்தான் அவரைச் சுருக்கமாகப் பாராட்டி இருக்கிறேன்.

அவர் பார்ப்பதற்கு கரடுமுரடாக இருப்பார். தாடி எல்லாம் வைத்துக்கொண்டு பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருப்பார். ஆனால் அவர் பழகுகிற போது ஒரு குழந்தைத் தன்மையுடன் பேசக்கூடியவர், பழகக்கூடியவர். ஒரு சிறந்த ஆற்றலாளராக கழகம் தான் - கலைஞர் தான் - நான் தான் அவர் மூச்சாக இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கும் நிலையில், தன்னுடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

எனவே அவருடைய அன்புச் செல்வங்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்றுச் சிறப்போடு வாழ்வாங்கு வாழ்ந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில், புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொன்னதுபோல, “வீட்டிற்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாய்“ வாழுங்கள்ஞ் வாழுங்கள்ஞ் வாழுங்கள்ஞ் என்று மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றிஞ் வணக்கம்ஞ்

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

Tags : Palanisamy ,speech ,MK Stalin , மு.க.ஸ்டாலின்
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...