சேலம்: மத்திய பொது பட்ஜெட்டில் சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டப்பணிக்கு ரூ.1000 மட்டும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பொது பட்ஜெட்டை கடந்த 1ம் தேதி, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். இதில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மிக குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைமுறையில் 9 புதிய அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் (871 கி.மீ), 4 பாதை மாற்றும் திட்டம் (839 கி.மீ), 14 இருவழிப்பாதை திட்டம் (1,418 கி.மீ) ஆகியவை உள்ளன. இத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற ரூ.30,961 கோடி நிதி தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு என ரூ.2,972 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. செயல்பாட்டில் இருக்கும் 27 திட்டங்களில் பலவற்றிற்கு மிக குறைந்த தொகையை மட்டும் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளனர்.
இந்த வகையில்,சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்-கரூர்-திண்டுக்கல் இடையே 160 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிப்பாதை அமைக்க கடந்த 2 ஆண்டுக்கு முன் அனுமதி அளித்தனர். திட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையிலேயே தற்போது வரை இத்திட்டம் இருக்கிறது. நடப்பு பட்ஜெட்டில், சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கும் என ரயில்வே அதிகாரிகளும், பயணிகளும் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டை போலவே இத்திட்டத்தை நடப்பாண்டும் கிடப்பில் போட்டுள்ளனர். அதாவது நடப்பாண்டு பட்ஜெட்டில் சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டத்திற்கு வெறும் ரூ.1000 மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
திட்டம் நடைமுறையில் வைக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் ரயில்வே நிர்வாகம் கணக்கு காட்டியுள்ளது. இதனால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு திருச்சி வழித்தடம் மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாகவே சென்னை-சேலம்-கரூர்-திண்டுக்கல் பாதை கருதப்படுகிறது. இம்மார்க்கத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவே சேலம்-கரூர் இடையே 85 கிலோ மீட்டருக்கு புதிய அகல ரயில்பாதை அமைக்கப்பட்டது. இப்பாதையில் தற்போது ரயில்கள் இயங்கும் நிலையில், இருவழிப்பாதையாக மாற்றினால் முழு பயன்பாட்டிற்கு வரும் என திட்டமிடப்பட்டது. ஏற்கனவே சென்னையில் இருந்து சேலம் வரை இரட்டை வழிப்பாதை இருக்கிறது. சேலத்தில் இருந்து திண்டுக்கல் வரை இரட்டை வழிப்பாதையை அமைத்துவிட்டால், இவ்வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்கலாம்.
அதனால், இந்த இருவழிப்பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சேலம் ரயில்வே கோட்ட பயணிகள் நலச்சங்கத்தினரும், சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டத்தை விரைந்து முடித்திட கோரி வருகின்றனர். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு வழங்காமல் மத்திய அரசு இருந்து வருகிறது. எனவே வரும் ஆண்டிலாவது இத்திட்டத்திற்கு தேவையான ரூ.1,600 கோடியில், பெருமளவை ஒதுக்கீடு செய்து, பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டத்திற்கு நடப்பாண்டு அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், திட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்காக ரூ.1000 மட்டும் ஒதுக்கியுள்ளனர். ஆனால், சேலம் கோட்டத்தில் நடந்து வரும் சேலம்-மேட்டூர் அணை இருவழிப்பாதை திட்டம் அடுத்த ஆண்டு ஆகஸ்டில் நிறைவடையும். அதற்கு தேவையான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.
