×

பக்தர்களிடமிருந்து 312 சவரன் வாங்கிய நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலையில் துளிகூட தங்கம் இல்லை: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்

 

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பயன்பாட்டில் உள்ள உற்சவர் சிலை தொன்மையானது் 2015ல் சேதமானதால், புதிதாக சோமாஸ்கநீதர் மற்றும் ஏலவார்குழலி ஆகிய இரு உற்சவர் சிலைகளை செய்ய, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. உற்சவர் சிலை செய்ததில் தங்க மோசடி நடத்திருப்பதாக, காஞ்சிபுரந்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின்படி, சிவகாஞ்சி போலீசார், 2017ல் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, கோயில் அர்ச்சகர்கள் என 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு உடனடியாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்தது. சிலைகள் செய்தபோது 4.7 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், இரு புதிய சிலைகளிலும், தங்கம் சேர்க்கப்படவில்லை என ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. இவ்வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீர சண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா, அர்ச்சகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு அடுத்தகட்ட நகர்வு இல்லாமல் முடங்கியது. 2023ல் சிவகாஞ்சி போலீசார் இவ்வழக்கை விசாரித்தனர். தொடர்ந்து, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிவகாஞ்சி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கோயில் செயல் அலுவலர் முருகேசன், சிலை செய்த ஸ்தபதி மயிலாமணி ஆகிய இருவரை நீக்கியும், இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீர சண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா ஆகிய இருவரை சேர்த்தும், சிவகாஞ்சி போலீசார் குறிறப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே, 2017ல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை 2023ல் சிவகாஞ்சி போலீசாரால் திருத்தப்பட்டுள்ளது. அந்த திருத்தப்பட்ட நகல், மனுதாரரான அண்ணாமலைக்கு கிடைக்கப்பட்டது. உற்சவர் சிலை தயாரிப்பு, தங்கம் தன்கொடை தொடர்பாக, தினேஷ் என்ற பக்தர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு கோயில் நிர்வாகம் அளித்த பதிலில், கடந்த 2015ம் ஆண்டில் சுவாமி மலையில், மாசிலாமணி என்ற ஸ்தபதியால், புதிய உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. சிலை செய்தபோது வீடியோ ஏதும் எடுக்கவில்லை. பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய தங்கத்திற்கு ரசீது ஏதும் போடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால், பக்தர்களிடமிருந்து 312 சவரன் நகைகளை, எந்த அடிப்படையில் அறநிலையத்துறையினர் பெற்றனர் என்ற கேள்வி எழுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்காக, கடந்த 2015ல், இந்து சமய அறநிலையத்துறை செய்த புதிய உற்சவர் சிலைகள் வழங்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், 312 சவரன் தங்கம் பக்தர்களிடமிருந்து பெறப்பட்டதாகவும், ஆனால், ஐ.ஐ.டி. சார்பில் ஆய்வு செய்ததில், துளி தங்கம் கூட இல்லை எனவும், திருத்தப்பட்ட எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தல், போலி என்று தெரிந்தும் உண்மை என்று பயன்படுத்துதல் என்ற பிரிவுகள் நீக்கப்பட்டு, கோயில்களில் சிலைகள் மற்றும் சிலை சார்ந்த பொருட்களை திருடுவது பிரிவில், ஒரே நோக்கத்திற்காக பலர் கூட்டாக குற்றச் செயல்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கியுள்ள நிலையில், 312 சவரன் தங்கம் பக்தர்கள் வழங்கியிருப்பது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்வழக்கு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், கடந்த டிசம்பர் 10ம் தேதி, முதன்முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா ஸ்தபதி முத்தையா, அர்ச்சகர்கள் என 9 பேர் ஆஜராகினர். அவர்களிடம் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இவ்வழக்கு குறித்து கருத்துகளை கேட்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை, பிப். 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. பக்தர்களிடம் நன்கொடை பெற்ற 312 சவரன் நகைகளின் தற்போதைய மதிப்பு 3.12 கோடி ரூபாய் என்பது தெரிய வருகிறது. இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Kanchipuram Ekambaranathar ,Chennai ,Utsavar ,Kanchipuram Ekambaranathar temple ,Hindu Religious and Endowments Department ,Somaskaneedhar ,Yelawarkuzhali ,
× RELATED சென்னை மெரினா கடற்கரையில் காவலர்கள்...