×

தென் மாவட்டங்களில் சசிகலாவுக்கு அதிகரிக்கும் வரவேற்பு போஸ்டர்கள் : அதிமுக தலைமை குய்யோ... முய்யோ...

ஒட்டன்சத்திரம்திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து, ஒட்டப்படும் போஸ்டர்களால் அதிமுக தலைமை கலக்கமடைந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சில தினங்களில் அவர் தமிழகம் வர உள்ள நிலையில், தென் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் அவரை வரவேற்று தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். சசிகலா ஆதரவு நிர்வாகிகளை கட்சியிலிருந்து அதிமுக மேலிடம் அதிரடியாக நீக்கி வருகிறது. இருப்பினும் வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டுவது அதிகரித்து வருகிறது.இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் நாவல்துரை நகர் முக்கிய பகுதிகளில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் ‘முகவரி இல்லாதவர்களையும் முதல்வர் ஆக்கி காட்டிய எங்களின் அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர், எங்களின் தியாகத்தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக’’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

கொடைக்கானல் நகர, ஒன்றிய பகுதியில் ‘அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவர்களே வருக வருக’ என மேல்மலை கூக்கால் கிராமத்தை சேர்ந்த அதிமுக வார்டு உறுப்பினர் அருண், பள்ளங்கி கோம்பை அதிமுக கிளை செயலாளர் முத்தையா ஆகியோர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் கொடைக்கானல் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அதிமுக மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய துணைச்செயலாளர் செல்லப்பாண்டி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் ‘அதிமுக பொதுசெயலாளர் சசிகலா தமிழ்நாட்டை வழிநடத்த வேண்டும்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆண்டிப்பட்டியில் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி வருவது கட்சி மேலிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி வரும் நிலையில், தொடர்ந்து சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது கட்சி தலைமையை கலக்கமடையச் செய்துள்ளது.



Tags : districts ,Sasikala ,AIADMK ,Muyo ,Kuyo , சசிகலா
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...