×

விளையாட்டாக ‘விளையாட’ தொடங்கி செல்போனில் சிறைப்படும் சிறுவர்கள்: பாதிக்கப்படும் உடல், மனநிலை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்

இன்றைய நவீன உலகம் தொழில்நுட்பங்களால் ஆளப்படுகிறது. நம்மைச் சுற்றி வீடுகளில் கோழி, நாய், பூனை, எலி, ஆடு, மாடுகள், மாட்டுவண்டி இருந்த காலம் போய், தற்போது கார், டூவீலர், சைக்கிள், கணினி, செல்போன், ஏர்போன், லேப்டாப், டேப் ஆகியவை இடம் பிடித்துக் கொண்டன. இந்த வகையில் செல்போனும் நவீன உலகில் மனிதர்களின் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது. செல்போனை ஒருநாள் மறந்து வீட்டில் வைத்து அலுவலகம் வந்துவிட்டால் அன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை சற்றே யூகித்தால் அதை நம்மால் உணர முடியும். அறிவியல் உலகம் ’ஒளி’ வேக பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. எந்த பொருளையும் அளவறிந்து பயன்படுத்தினால் பிரச்னை இல்லை. ஆனால், அளவு மீறினால் சிக்கல்தான்.

வினையாகும் விளையாட்டுகள்

செல்போனில் கேம் விளையாடத் தொடங்கும் சிறுவர்கள் நாளடைவில் அதனுள் சிறைப்பட்டு விடுகின்றனர். மணிக்கணக்கில் செல்போனை பயன்படுத்தும் சிறுவர்கள் மன, உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். செல்போன் திரையில் மிளிரும் வண்ணங்கள், கவர்ச்சிகரமான இசை, வீடியோ கேம் ஆகியவை சிறுவர்களை வெகுவாக ஈர்க்கின்றன. இதனால், அவர்கள் செல்போனை பயன்படுத்த அதிகம் விரும்புகின்றனர். அவர்களிடம் இருந்து செல்போனை பறித்தவுடன் ஏதோ பெரிதாக ஒன்றை இழந்துவிட்டதைப் போல உணர்கின்றனர். வேலைக்கு சென்று களைப்பில் வீடு திரும்பும் பெற்றோர் பிள்ளைகள் தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, அவர்களிடம் செல்போனை தருகின்றனர். சிலர் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் செல்போனில் விடியோக்களை ஓடவிட்டு சாப்பிட வைக்கின்றனர். இது மிகவும் தவறான அணுகுமுறை என்றும், இரண்டு வயதுக்கு கீழான குழந்தைகளை டிஜிட்டல் திரைகளை பார்க்க அனுமதிக்க கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காவு வாங்கும் கதிர்வீச்சு

12 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் கட்டுப்பாடின்றி செல்போன் பார்க்கும்போது கதிர்வீச்சால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. மேலும், ஆஸ்தனோபியா எனும் கண்சோர்வு, அடிக்கடி கண்வலி, தலைவலி, மூளை வளர்ச்சி பாதிப்பு, குழந்தைகள் பேசுவதில் தாமதம், தனிமையை நாடுதல், அடம் பிடித்தல், முரட்டுத்தனம், தற்கொலை எண்ணம் தோன்றுதல், சமூகத்துடன் ஒன்றி பழகுவதில் நாட்டமின்மை ஆகியவை ஏற்படலாம். புத்தகம் வாசிப்பு, வெளியில் சென்று விளையாடுவதன் மீதான நாட்டமும் வெகுவாக குறைந்துவிடும்.

தொலையும் தூக்கம்

பல வண்ணங்களில் ஒளிரும் டிஜிட்டல் திரைகளை கண் இமைக்காமல் பார்க்கும் சிறுவர்களுக்கு கண்வறட்சி, ஏரிச்சல் ஏற்படும். கண்ணுக்கு மிக அருகே செல்போனை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருப்பதால் தூரப்பார்வை குறைபாடும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், கண்ணாடி அணிய நேரிடும். மேலும், இரவில் தூக்கமின்மையால் பரிதவிப்பர். ஆழமாக கவனம் செலுத்துவது குறைந்துவிடும். சொந்தமாக யோசிக்கும் திறன் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். குழந்தைகள் 12 வயதை கடக்கும்வரை அவர்களை கூடுமான அளவு செல்போன் பயன்பாட்டில் இருந்து தள்ளிவைப்பது நல்லது. 12 வயதுக்கு மேலான சிறுவர்களுக்கு செல்போன் கொடுக்கலாம். அதிலும் ஒரு நாளைக்கு 30 முதல் 40 நிமிடங்கள் வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அப்போது சிறுவர்கள் பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் இருப்பது மிகவும் அவசியம்.

கதை கேளு… கதை கேளு…

சிறுவர்களை செல்போன் பழக்கத்தில் இருந்து மீட்க, அவர்களுடன் பெற்றோர் தங்களது நேரத்தை செலவிட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 மணி நேரம் வீட்டுக்கு வெளியில் தெருவிலோ அல்லது விளையாட்டு மைதானத்துக்கோ அழைத்துச் சென்று விளையாட வைக்கலாம். தினமும் இரவில் சிறுவர்களுக்கு கதை கூறி தூங்க வைக்கலாம். வண்ணப் படங்களுடன் கூடிய கதை புத்தகங்களை வாங்கி கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு குழந்தைகளின் கவனத்தை நல்ல வழியில் திசைதிருப்பி செல்போன் பயன்பாட்டு நேரத்தை மெல்ல மெல்ல குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

The post விளையாட்டாக ‘விளையாட’ தொடங்கி செல்போனில் சிறைப்படும் சிறுவர்கள்: பாதிக்கப்படும் உடல், மனநிலை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்