×

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த `வேதா இல்லம்’ அரசு நினைவிடமாக மாற்றப்பட்டது

* முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
* ஐகோர்ட் உத்தரவால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த `வேதா இல்லம்’ அரசு நினைவிடமாக நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். உயர் நீதிமன்ற உத்தரவால் பொதுமக்கள் ஜெயலலிதா வீட்டை பார்வைவிட அனுமதிக்கப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதா வாழ்ந்த `வேதா இல்லம்’ அரசுடைமையாக்கப்பட்டு நினைவிடமாக மாற்றப்படும் என்று கடந்த 2017 ஆகஸ்ட் 17ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை, அரசின் நினைவிடமாக மாற்றும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்’ 10 கிரவுண்ட் 322 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. முன்பகுதியில் எழில்மிகு  தோட்டத்துடன் கூடிய இல்லத்தை ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் இருந்ததை போல பழமை மாறாமல் தமிழக அரசால் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அதன்படி ஜெயலலிதா வாழ்ந்த அறை, நூலகம், அலுவலக அறை, விருந்தினர் காத்திருப்பு அறை, விருந்தினர் சந்திப்பு அறை, கூட்ட அரங்கு ஆகிய இடங்களில் பூச்சு வேலைப்பாடுகள், தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளது.

அரசுடையாக்கப்பட்டுள்ள வேதா இல்லத்தை 28ம் தேதி (நேற்று) முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார் என்றும், அன்று முதல் பொதுமக்கள்
பார்வையிட அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், போயஸ்கார்டன் இல்லத்தை அரசு கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து தீபாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள ஜெயலலிதா இல்லத்தை திறந்து வைக்கலாம். ஆனால், ஜெலலிதா வீட்டை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது. நினைவில்லமாக மாற்றும் விழாவில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், வீட்டுக்குள் செல்ல அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை உயர் நீதிமன்றம் விதித்தது.

உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று, ஜெயலலிதா இல்லத்தை நேற்று காலை 10.45 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். முன்னதாக போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதா இல்லத்துக்கு காலை 10 மணி முதலே  அமைச்சர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். காலை 10.40 மணிக்கு துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், காலை 10.44 மணிக்கு முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமியும் ஜெயலலிதா இல்லத்துக்கு வந்தனர். ஜெயலலிதா வீட்டின் பிரதான வாசல் அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவ படத்துக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்,  அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அரசுடமையாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை திறந்து வைப்பதற்கு அடையாளமாக அங்கிருந்த கல்வெட்டை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். பின்னர், ரிப்பன் வெட்டி ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து,  வாசலில் வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கை இபிஎஸ், ஓபிஎஸ், சபாநாயகர் தனபால் ஆகியோர் ஏற்றினர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் மூத்த அமைச்சர்கள் மட்டும் ஜெயலலிதா  இல்லத்துக்குள் ஒவ்வொரு அறையாக சென்று, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த  பொருட்களை பார்வையிட்டனர். காலை 11.05 மணிக்கு அனைவரும் ஜெயலலிதா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதையடுத்து, நேற்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட `ஜெயலலிதா நினைவு இல்லம்’ பூட்டப்பட்டு, சாவியை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை தலைவர் தனபால், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர்  மணிவாசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து  கொண்டனர். ஜெயலலிதா நினைவு இல்லத்தை பார்வையிட அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வருவதை தடுக்கும் வகையில் போயஸ் கார்டனை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். காலை 8 மணி முதலே அதிமுக தொண்டர்கள் போயஸ்கார்டனில் அமைந்த பகுதியில் குவிந்தனர். ஆனாலும் போலீசார் அவர்களை போயஸ் கார்டன் இல்லம் அருகே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

ஜெ. இல்லத்தின் சிறப்பு அம்சங்கள்

* வேதா நிலையத்தின் ஒரு பகுதி வீடும் மற்றொரு பகுதி தோட்டத்துடன் அமைந்துள்ளது. இதன் மதிப்பு ₹30 கோடி. ஜெயலலிதா தனது தாயார் சந்தியா தேவிக்காக இந்த போயஸ் தோட்ட இல்லத்தை பிரம்மாண்டமாக கட்டினார். வேதா நிலையத்திற்கு தமிழகத்தில் உள்ள கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் வந்து சென்றுள்ளனர்.
* வேதா நிலையத்தின் பரப்பளவு 10 கிரவுண்ட் (24 ஆயிரம் சதுர அடி), தரை தளத்துடன் 2 அடுக்குகளை கொண்டது. வேதா நிலையத்தில் நுழைந்த உடன் இடது புறம் விநாயகர் கோவில் உள்ளது. பிரசாரம், கொடநாடு செல்லும்போது விநாயகரை வணங்கி விட்டு தான் செல்வார்.
* வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் நீண்ட ஹால் உள்ளது. அதன் அருகே சிறிய ஆலோசனை கூடம் உள்ளது. அதன் அருகில் அமைச்சர்கள், அதிகாரகள் அமரும் அறை உள்ளது. மாடி பகுதிக்கு ஏறி செல்லும் இடத்தில் மற்றொரு மீட்டிங் ஹால் உள்ளது. அதன் அருகே வருபவர்கள் அமர அறை உள்ளது. எல்லா இடங்களிலும் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
* முதல் தளத்திற்கு படி ஏறிய உடன் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான நூலகம் உள்ளது. அதில் 8,376 புத்தகங்கள் உள்ளது. நூலகத்திற்கு அருகே ஒரு சிறிய மீட்டிங் ஹால் உள்ளது. அதை தாண்டிய உடன் ஜெயலலிதாவின் அறை உள்ளது. அதன் அருகே ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறை உள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முதல் தளத்தில் கட்சி பணிகள் நடைபெறும். அவரது நேர்முக உதவியாளர்களின் அலுவலகம் அங்கு செயல்படும். இரண்டாம் தளத்தில் முதலமைச்சருக்கான முகாம் அலுவலகம் செயல்பட்டு வந்தது.
* ஜெயலலிதாவின் வீட்டில் இருக்கும் அசையா சொத்துக்களின் பட்டியலில் 4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 601.4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது. தற்போது இவை அனைத்தும் அரசு பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜெ. வீட்டு முன் நின்று
செல்பி எடுத்த தொண்டர்கள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக அறிவிப்பதன் அடையாளமாக திறந்து வைத்து சென்றதும், பொதுமக்கள் ஜெயலலிதா வீட்டின் அருகில் வரை செல்ல போலீசார் அனுமதித்தனர். அப்போது, அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா வீட்டின் மதில் சுவர் அருகே நின்று தங்களது செல்போன் மூலம் `செல்பி’ எடுத்துக் மகிழ்ந்தனர். அந்த புகைப்படத்தில் ஜெயலலிதாவின் வீட்டின் முழு தோற்றமும் தெரியாது. மாடி பகுதி மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

15 நிமிடங்களில் விழா முடிந்தது
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த விழா காலை 10.45 மணிக்கு தொடங்கி காலை 11.05 மணிக்கு நிறைவடைந்தது. உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக எந்தவித ஆரவாரமின்றி சரியாக 15 நிமிடங்களில் ஜெயலலிதா நினைவு இல்லம் திறக்கும் விழா முடிவடைந்தது. முதல்வர் திறந்து வைக்கும் நிகழ்ச்சியை படம் எடுக்க பத்திரிகை மற்றும் டிவி புகைப்பட கலைஞர்களை மட்டுமே ஜெயலலிதா வீட்டிற்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். நிருபர்களை கூட ஜெயலலிதா நினைவு இல்ல திறப்பு நிகழ்ச்சியை பார்வையிட அனுமதிக்கவில்லை.


Tags : Jayalalithaa ,Veda Illam ,government memorial , The late former chief minister 'Veda Illam' where Jayalalithaa lived The government turned it into a memorial
× RELATED பா.ஜ தலைவர்களை விட தீவிரமாக இருந்தார்;...