×

கூகுள் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டில் புதிய செல்போன் ஆலை: முதல்முறையாக அமைப்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலினை தேர்தல் முடிவுக்கு பிறகு சந்திக்க திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க உள்ளனர். தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தொழில்துறை முதலீடுகள், வேலைவாய்ப்புகள், கல்வி, சுகாதார வசதிகள் என அனைத்திலும் சிறப்பான இடத்தை தமிழ்நாடு வகிக்கிறது.

குறிப்பாக 2030ம் ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக்குவது, தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பது போன்ற பல்வேறு முயற்சிகள் தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. தொழிற்துறைக்கான உட்கட்டமைப்புகள், தொழில் தொடங்குவதற்காக எளிய நடைமுறைகள், தொழிற்சாலைகள் அமைப்பதற்கான ஒத்துழைப்பு, சிறப்பான சட்டம் -ஒழுங்கு, முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கூட்டு முயற்சி என பல்வேறு வகைகளில் ஒருங்கிணைந்த முயற்சியால் தொழில்துறையில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது.

இதனால் உலக அளவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி பல லட்சம் கோடிகள் முதலீடு செய்து உள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 2 நாளில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26.9 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் நிறுவனங்கள் ரூ.3,440 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்து உள்ளன. கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் டாடா பவர் ரூ.70,000 கோடி, டாடா எலக்ட்ரானிக்ஸ் ரூ.7000 கோடி, அதானி குழுமம் ரூ.42,700 கோடி, சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூ.31,000 கோடி, ஹூண்டாய் நிறுவனம் ரூ.26,000 கோடி, ஜெஎஸ்டபிள்யூ எனர்ஜி ரூ.10,000 கோடி, கார்னிங் க்ளாஸ் ரூ.1,003 கோடி, மகிந்திரா ஹாலிடேஸ் ரூ.800 கோடி, வின்பாஸ்ட் பேட்டரி கார் ஆலை ரூ.16,000 கோடி, க்ராக்ஸ் ரூ.2,440 கோடி, குவால்காம் ரூ.177 கோடி, டைட்டன் இன்ஜினியரிங் ரூ.430 கோடி, போயிங் ரூ.300 கோடி, கெம்ப்ளாஸ்ட் சன்மார் ரூ.1007 கோடி, ரூ.500 கோடியில் திரைப்பட நகரம், பேட்டரி மறு சுழற்சி ஆலை ரூ.500 கோடி என பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்து உள்ளன.

இதேபோல், பேங்க் ஆப் மெரிக்கா மிகப்பெரிய தலைமை அலுவலகம், கோத்ரெஜ் தொழிற்சாலை, மேர்ஸ்க் சரக்கு போக்குவரத்து மையங்கள், டேட்டா மையம், ஐ-போன் தொழிற்சாலை, டெஸ்லா கார் தொழிற்சாலை, ஓலா எலக்ட்ரிக் ஆலை, ஆடிடாஸ் தலைமையகம், மெட் எக்ஸ்பர் உலகளாவிய திறன் மையம், பொம்மை தயாரிப்பு மையம், கோனே எலிவேட்டர்ஸ் ஆலை விரிவாக்கம், போர்டு நிறுவனம், ஷூ தொழிற்சாலை, மின்சார் கார் உற்பத்தி தொழிற்சாலை என பல்வேறு நிறுவனங்கள் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால் பதிக்க ஒப்பந்தங்கள் செய்து உள்ளது.

இதுதவிர தமிழ்நாட்டை மென்பொருள் நிறுவனங்களின் (ஐடி பார்க்) ஹப்பாக மாற்றும் வகையில் சென்னைக்கு அடுத்த படியாக கோவை, மதுரையில் மிகப்பெரிய ஐடி பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. திருச்சி, தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மினி டைடல் பார்க் போன்ற ஐடி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னைக்கு வேலை தேடி வருபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும். பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதாரம் மேம்படும்.

கடந்த 2021ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டிலிருந்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2105 மட்டுமே. மூன்றாண்டுகளாக இந்த அரசு புத்தொழில் நிறுவனங்களுக்கு அளித்து வரும் மிகப்பெரிய ஊக்கம் காரணமாகவே 2021க்கு பிறகு 6,115 புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிகளின் விளைவாக புத்தொழில் நிறுவனங்கள் (startups) அமைவதற்கான உகந்த சூழலை உருவாக்குவதில் நாட்டிலேயே தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த வெற்றியை தக்க வைக்கும் நோக்கோடு உலகில் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணி புத்தொழில் நிறுவனங்களும், இளம் தொழில்முனைவோரும் கலந்து கொள்ளும் வகையில் உலகப் புத்தொழில் மாநாடு (Global Startup Summit) வரும் 2025 ஜனவரி மாதம் சென்னையில் நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தொழில்துறையில் உலக அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கும் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.

இதுவரை தமிழ்நாட்டிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அரபுநாடுகள், பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி அவற்றின் மூலம் 9 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 30 லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இதன் தொடர்ச்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு உலகப் புகழ் பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் சென்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் பயனாக, கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முதன்முறையாக முன்வந்துள்ளனர். இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னை வர உள்ளனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

The post கூகுள் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டில் புதிய செல்போன் ஆலை: முதல்முறையாக அமைப்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலினை தேர்தல் முடிவுக்கு பிறகு சந்திக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Google ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED இஸ்லாமிய சமுதாய மக்களின் கோரிக்கைகளை...