×

சென்னையில் பணியாற்றியது சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தந்தது: ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பெருமிதம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்று பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. விழாவில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பேசியதாவது: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றபோது தமிழ் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருந்தேன். கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு சட்டக் கல்லூரிகளில் விரிவுரையாற்றி வருகிறேன். எனது அடுத்த தலைமுறையினரை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் சென்னைக்கு வந்தபோது நீதிபதிகள் எப்படி என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று யோசித்தேன். ஆனால் நீதிபதிகள் வைத்தியநாதன், மகாதேவன் ஆகியோர் என்னை விமான நிலையம் வரை வந்து அன்புடன் வரவேற்றனர். சக நீதிபதிகள் காட்டிய அன்புதான் இங்கு நான் எனது சொந்த ஊரில் இருப்பதை போல உணரச் செய்தது. சென்னையில் பணியாற்றிய காலத்தில் பல நீதிபதிகள் தங்களது ஆழமான கருத்துகளால் என்னைச் செறிவூட்டினார்கள்.
அடுத்த தலைமுறை வழக்கறிஞர்களை குறை சொல்லும் போக்கு பெருகி வருகிறது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் சந்தித்த இளம் வழக்கறிஞர்கள் அனைவருமே மிகச் சிறந்தவர்கள். இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.மகாதேவன், மூத்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், இதில் தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் மற்றும் அனைத்து நீதிபதிகள், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜோதிராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஆர்.நீலகண்டன், பி.முத்துக்குமார், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் தலைவர் எஸ்.பிரபாகரன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், பொருளாளர் ஜி.ராஜேஷ் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் பணியாற்றியது சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தந்தது: ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Justice ,Gangapurwala Perumitam ,Chennai High Court ,SV Gangapurwala ,Gangapurwala ,Madras High Court ,
× RELATED தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும்...