வாட்ஸ் -அப்பில் ரகசிய தகவல் பகிர்வு சர்ச்சை எதிரொலி : டெலிகிராமில் உலகம் முழுவதும் 50 கோடி பயனாளர்கள் இணைந்தனர்!!

புதுடெல்லி:பேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப்பை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் வாட்ஸ்அப் தனிநபர் கொள்கை புதுப்பிக்கப்பட்டது. இந்த புதிய அப்டேட்டுக்கு ஒத்துழைக்காதவர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய கொள்கை புதுப்பிப்பு தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

வாட்ஸ்அப் தகவல்கள் பேஸ்புக்குடன் பகிரப்படும் என அச்சம் நிலவியதால் பலர் டெலிகிராம், சிக்னல் போன்ற பிற ஆப்களை நாடத் துவங்கினர். இந்த நிலையில், வாட்ஸ் -அப்பில் ரகசிய தகவல் பகிர்வு சர்ச்சையால் டெலிகிராமில் உலகம் முழுவதும் 50 கோடி பயனாளர்கள் இணைந்தனர்.கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேருக்கு மேல் டெலிகிராமில் இணைந்தனர். டெலிகிராம் ஆப்  2013ல் நிகோலாய் வலேரியேவிச் துரோவ் மற்றும் பாவெல் துரோவ் ஆகியோரால் தொடங்கப்பட்டது. டெலிகிராம் Android, iOS, Mac மற்றும் Windows-இல் அணுக கிடைக்கும் ஒரு மெசேஜிங் ஆப் ஆகும். இந்த ஆப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை ஆதரிக்கிறது. டெலிகிராமில் உள்ள அனைத்து மெசேஜ்களும், வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்படுகின்றன,

இதனிடையே இப்பிரச்னை பற்றி விளக்கம் அளித்து வாட்ஸ்அப் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கொள்கை புதுப்பிப்பு எந்த வகையிலும் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்காது. உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் நீங்கள் மேற்கொண்ட தகவல்கள் எதுவும் கண்காணிக்கப்படாது. நீங்கள் ஷேர் செய்த லொகேஷனை வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக்கால் பார்க்க முடியாது. பேஸ்புக்குடன் உங்கள் தொடர்புகளை வாட்ஸ்அப் பகிராது. வாட்ஸ்அப் குரூப்கள் தனிப்பட்டதாகவே இருக்கும். அனைத்து தகவல்களும் என்கிரிப்ட் செய்வதால் தகவல்களை படிக்க முடியாது. தகவல்கள் எவ்வளவு நாட்கள் வேண்டும் என்பதை பயனர்களே செட் செய்து கொள்ளலாம்,’ என கூறியுள்ளது.

Related Stories: