×

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் காணிக்கையாக கிடைத்த ரூ.3.20 கோடி ரூ.2000 நோட்டுகள் மாற்றம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் காணிக்கையாக கிடைத்த ரூ.3.20 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஆர்பிஐ ரத்து செய்தது. பின்னர் அதை மாற்ற குறிப்பிட்ட காலக்கெடுவை விதித்திருந்தது. ஆனால் இதை மாற்றுவதில் நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். ஏடிஎம்களில் பல கிலோ மீட்டர் தூரம் நின்று பணத்தை மாற்றினர். இதனிடையே ஆர்பிஐ சார்பில் புதிதாக ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருந்தது. இதனையும் அண்மையில் முழுவதுமாக ரத்து செய்வதாக ஆர்பிஐ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். தினமும் ரூ.3 கோடிக்கு மேல் உண்டியல் வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த சில மாதங்களாக திரும்ப பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகளும் தொடர்ந்து உண்டியலில் பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரிசர்வ் வங்கி மற்றும் ஒன்றிய நிதியமைச்சகத்திடம் மனு அளித்திருந்தது. அதில், தங்களிடம் பக்தர்கள் செலுத்திவரும் ரூ.2000 நோட்டுக்களை மாற்றித்தர கோரிக்கை வைத்தது. இதனை ஒன்றிய நிதியமைச்சகம் மற்றும் ஆர்பிஐ ஏற்றது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 1ம்தேதி முதல் கடந்த மார்ச் 31ம்தேதி வரை ரூ.3.20 கோடியிலான ரூ.2000 நோட்டுகள் மாற்றிக்கொண்டது. நடப்பு மாதமான ஏப்ரலில் இருந்து ரூ.2000 நோட்டுகளை பக்தர்கள் யாரும் செலுத்துவதில்லை எனக்கூறப்படுகிறது. இதேபோல் கடந்த 2016ம் ஆண்டு ரத்து செய்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை காலக்கெடுவை தாண்டி பக்தர்கள் தொடர்ந்து திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்தி வந்தனர். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவை மீறி கிடைத்த பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை ஏற்பதற்கு ஆர்பிஐ மற்றும் ஒன்றிய நிதியமைச்சகம் மறுத்துவிட்டது. இதனால் ரூ.49.70 கோடிக்கு ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்ற முடியாமல் தேவஸ்தானம் கிடப்பில் வைத்தது குறிப்பிடத்தக்கது.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் காணிக்கையாக கிடைத்த ரூ.3.20 கோடி ரூ.2000 நோட்டுகள் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati Eyumalayan ,RBI ,Dinakaran ,
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி