×

பொன்னம்பலமேட்டில் பரண் அமைக்க தடை

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. புகழ்பெற்ற மகரவிளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதி நடக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் நடக்கும் திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆபரண பெட்டிக்கு பக்தர்கள் வரவேற்பு அளிக்கவும், தீபாராதனை காட்டவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனத்துக்கு பக்தர்கள் பரண் அமைத்து காத்திருக்க அனுமதியில்லை.

வழக்கமாக மகரஜோதிக்கு 2, 3 நாட்களுக்கு முன்னதாகவே பக்தர்கள் பரண் அமைத்து தங்குவது வழக்கம். பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படும் திருவாபரண பெட்டி வரும் 14ம்தேதி மாலை 6.20க்கு சன்னிதானம் வந்தடையும். திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு சார்த்தி தீபாராதனை நடக்கும்போது, மகரஜோதி தெரியும். அப்போது பொன்னம்பல மேட்டில் கற்பூர ஆராதனையும் நடக்கும். இதற்கிடையே, ஆந்திராவில் இருந்து தரிசனம் செய்ய வந்த பக்தர்களில் 24 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. ஆனால் அவரும், உடன் வந்த குழுவும் மாயமாகி விட்டனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Tags : Ponnambalam , Prohibition on setting up paran at Ponnambalam
× RELATED ராச்சாண்டார் திருமலைக் கோயிலில்...