லண்டனில் 40 நாட்கள்!

நன்றி குங்குமம் தோழி

தெரியாத நாடு, புரியாத பாஷை, பழகாத மனிதர்கள், பழக்க மில்லாத உணவு இவற்றைத் தாண்டி தன் குறிக்கோளை நிறைவேற்றி வந்திருக்கிறார் விழுப்புர பொண்ணு சத்யா. அடிப்படை வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்தவர் சத்யா. பள்ளிப் படிப்பை முடிக்கவே பல தடைகளை சந்தித்துள்ளார். இப்போது அதை எல்லாம் தாண்டி லண்டனில் ஃபெலோஷிப் பெற்று ஆராய்ச்சித் தகவல்கள் சேகரிக்க சென்று திரும்பியுள்ளார் என்பது பெரிய விஷயம் தான். சாதனை புரிந்த கெட்டிக்கார மாணவியான சத்யா த்ரிலிங்கான தன் பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

“பிறந்தது வளர்ந்தது விழுப்புரம் பக்கம் ஏனாதி மங்கலம் என்ற சின்ன கிராமம். அப்பா இல்லை. அம்மா ஒரு தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலைப் பார்த்து வந்தார். அவரின் வருமானத்தில் தான் குடும்பத்தை நகர்த்தணும். பிளஸ் ஒன் வரை என்னை அம்மா படிக்க வச்சதே பெரிய விஷயம். பிளஸ் ஒன் முடிச்சதும், ‘படிச்சது போதும்’னு அம்மா என்னோட படிப்புக்கு பெரிய பூட்டு போட்டாங்க. பொருளாதார சூழல் என்னை மேலும் படிக்க விடாமல் தடுத்தது.

எனக்கு ஒரு பக்கம் கவலையாவும் அதிர்ச்சியாவும் இருந்தது. பின் அம்மா என்னோட படிப்பு ஆர்வத்தை பார்த்திட்டு இரண்டு சாய்ஸ் கொடுத்தாங்க. ஒன்னு ப்ளஸ் டூ முடிச்சிட்டு வேலைக்கு போகணும். இல்லைன்னா நர்ஸிங் படிக்கணும்னு சொன்னாங்க. நர்சிங் படிக்க எனக்கு விருப்பமில்ல. இருந்தாலும் அவங்களுக்காக சேர்ந்து படிச்சேன்’’ என்றவர் அதன் பிறகு வரலாறை முக்கிய பாடமாக எடுத்து கல்லூரியில் படித்துள்ளார்.‘‘நர்சிங் படிச்சிட்டு அம்மாக்கு வேலைக்கு போகணும்னு விருப்பம். ஆனா, எனக்கோ கல்லூரியில் வரலாறு எடுத்து படிக்கணும்னு ஆசை.

அம்மாகிட்ட சொன்ன போது, முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்கள சம்மதிக்க வைக்கவே பெரிய போராட்டமா இருந்தது. ஒரு வழியா அவங்க கிரீன் சிக்னல் காட்ட, பி.ஏ. வரலாறு கல்லூரியில் சேர்ந்து படிச்சேன். முதல் வருட கட்டணம் மட்டும்தான் நாங்க கட்டினோம். அதன் பிறகு என்னுடைய மதிப்பெண்ணை பார்த்து எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சது. அப்ப துவங்கி இப்ப வரைக்கும் கல்லூரி மட்டுமில்லை, என் பேராசிரியர்கள் மற்றும் தோழிகளின் உதவியுடன் தான் என்னுடைய கல்விக்கான பயணத்தை தொடர்ந்து வருகிறேன்.

கல்லூரியில் படிக்கும் போது, தமிழ் பேராசிரியரான ராஜலட்சுமி மேடம், ‘நீ ரொம்ப நல்லா படிக்கிற. இதுவரை வரலாற்றுத் துறையில் படிச்சவங்க யாரும் பெஸ்ட் ஸ்டூடண்ட் அவார்டு வாங்கியது கிடையாது. நீ கண்டிப்பா வாங்கணும்’ன்னு என்னை ஊக்கப்படுத்தினாங்க. அந்த விருது வாங்கணும்னா நிறைய போட்டிகளில் பரிசு வாங்கி இருக்கணும். நல்லாவும் படிக்கணும். நான் பி.ஏ.வில் கோல்டு மெடலிஸ்ட். பேச்சு, கட்டுரை என எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு கிட்டதட்ட 50 பரிசுகள் வாங்கினேன். என் தமிழ் பேராசிரியர் விரும்பியது போல எனக்கு அந்த வருடம் பெஸ்ட் ஸ்டூடண்ட் விருது கிடைச்சது.

அதன் பிறகு எம்.ஏ., எம்.ஃபில்னு எல்லாவற்றிலும் ரேங்க் ஹோல்டர், கோல்டு மெடலிஸ்ட், பெஸ்ட் ஸ்டூடண்ட்டுனு வரிசையா விருது பெற்றேன். செட் தேர்வும் (SET EXAM) எழுதி தேர்ச்சிப் பெற்றேன். என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சிக்கும் என் ஆசிரியர்கள் எனக்கு உதவியா இருந்தாங்க’’ என்று சொல்லும் சத்யா அதன் பிறகு தன் ஆராய்ச்சி பணியை துவங்கியுள்ளார். ‘‘எம்.ஃபில் முடித்த பிறகு ‘தெற்கிந்திய காலனியில் பஞ்சமும் சமூக நெருக்கடியும் 1850- 1900’(Famine and Social Crises in Colonial South India from 1850-1900) என்ற தலைப்பில் பி.எச்.டி செய்ய ஆரம்பித்தேன்.

அப்போது 19ம் நூற்றாண்டில் சென்னையில் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டி இருந்தது. ஆராய்ச்சிக்கான தேவையான தகவல்கள் எனக்கு இங்கு கிடைக்கல. ஆங்கிலேயர் ஆண்ட காலம் என்பதால் இங்கிலாந்தில் உள்ள நூலகத்தில் தான் அது குறித்த தகவல்கள் கிடைக்கும்னு தெரிய வந்தது. பி.எச்.டி கைடு பேராசிரியர் சந்திரிகா அவர்களின் அறிவுரையின்படி Charles Wallace India Trust (CWIT) Grant Award (2018-2019)க்கு விண்ணப்பித்தேன். இந்தியா முழுவதிலும் இருந்து நிறைய பேர் கலந்து கொண்டாலும் வருடத்திற்கு 10 அல்லது 15 பேர் மட்டுமே அதில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதில் நானும் ஒருத்தர். விருது பெற்றவர்களுக்கு இங்கிலாந்திற்கு செல்வதற்கான ஃபெலோஷிப் அனுமதி கிடைக்கப் பெற்றேன்’’ என்ற சத்யா இங்கிலாந்தில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.‘‘எனக்கு விமானத்தில் ஏறி பழக்கமில்லை. என் பயத்தைப் போக்க, லண்டன் செல்லும் முன் சண்டிகருக்கு ஒரு கருத்தரங்கிற்காக செல்ல வேண்டி வந்த போது ‘நீ விமானத்தில் தான் செல்ல வேண்டும்’ என என் கைடு அதற்கு ஏற்பாடு செய்தார். பின் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ந்தேதி லண்டனுக்கு கிளம்பினேன். தனிப்பட்ட முறையில் செல்வதால் அந்த ஊரைப் பற்றியும் நான் தங்க இருக்கும் இடத்தை குறித்தும் நிறைய தகவல்களை சேகரித்தேன்.

என்னுடைய ஆராய்ச்சிக்கு தேவைப்படும் தகவல்கள் உள்ள நூலகத்திற்கு அருகாமையில் உள்ள ஹாஸ்டலில்தான் தங்க திட்டமிட்டு இருந்தேன். அதனால் அதற்கான முன்பதிவு செய்து கொண்டேன். இங்கேயே எங்கே செல்வது? எப்படி செல்வது என்று கூகுள் மேப் பிரின்ட் போட்டுக் கொண்டேன். நிறைய விஷயங்கள்... அங்கு எப்படி நடந்து கொள்வது என்பதை என் கைடும் மற்ற பேராசிரியர்களும் எனக்கு சொல்லிக் கொடுத்தனர். விமான நிலையத்தில் இறங்கிய பின் அங்கிருந்து மெட்ரோ ரயிலில் என் பயணம் லண்டனில் துவங்கியது. நான் தங்க வேண்டிய ஹாஸ்டலுக்கு நடந்தே சென்றுவிட்டேன்.

ஆரம்பத்தில் அவர்களின் ஆங்கில உச்சரிப்பு ரொம்ப கடினமாகத் தான் இருந்தது. போகப்போக எனக்கும் பழகிப்போனது. நான் அங்கு தங்க இருக்கும் 21 நாட்கள் செலவிற்காக 1400 பவுண்டுகள் ஃபெலோஷிப் கொடுத்து இருந்தாங்க. ஆனால் அங்கு காஸ்ட் ஆஃப் லிவிங் அதிகம் என்பதால் அந்தப் பணத்தை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு சிக்கனமாக பயன் படுத்தினேன். காலையில் பழங்கள் மட்டுமே  சாப்பிடுவேன். மத்தியானத்தில் நூலகத்தில் தரும் உணவை சாப்பிடுவேன். என்னைப் பொறுத்த வரை என் குறிக்கோள் தான் முக்கியமாக இருந்தது.

சாப்பாட்டைப் பற்றி கவலைப்பட்டதில்லை. கிடைத்ததை சாப்பிடுவேன். ருசி பற்றி எல்லாம் யோசித்ததே இல்லை. ஹாஸ்டலில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு நடந்தே செல்வேன். ஹாஸ்டலில் 14 நாட்கள் தான் தங்க முடியும். 14 நாட்களுக்கு ஒரு முறை இடம் மாற்ற வேண்டும். முதலில் தங்கிய இடம் தான் கொஞ்சம் பக்கம். மற்றதெல்லாம் கொஞ்சம் தூரம் தான். ஆனாலும் நடந்தே தான் நூலகத்திற்கு செல்வேன். கஷ்டமாக தான் இருக்கும். நினைத்ததே சாதிக்க இதையெல்லாம் பொறுத்து தானே ஆக வேண்டும்.

மேலும் பணத்தை மிச்சப்படுத்தினால் தானே நீண்ட நாட்கள் தங்கி நிறைய விஷயங்களை சேகரிக்க முடியும். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், பிரிட்டிஷ் நூலகம், வெல்கம் நூலகம், ஸ்கூல் ஆப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ், நேஷனல் ஆர்சீவ்ஸ் ஆப் யுனைடெட் கிங்டம், யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன் என பல்கலைக்கழக நூலகங்களுக்கு சென்று தகவலை சேகரித்தேன். அவர்களின் சிஸ்டம் ரொம்பவே நன்றாக இருந்தது. நமக்குத் தேவையான தகவல்கள் மிக விரைவில் கிடைத்துவிடும் அளவிற்கு அனைத்துத் துறைகளும் தொழில்நுட்பத்தினால் மேம்பட்டிருந்தது.

மொத்தம் நாற்பது நாட்கள் இங்கிலாந்தில் தங்கி இருந்தேன். செப்டம்பர் மாதம் 15ம் தேதி இந்தியா வந்தேன். ஒரு கிராமத்து பெண்ணான நான் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைய காரணம் என் ஆசிரியர்களும், தோழிகளும் தான். அவங்க எல்லாருக்கும் இந்த சமயத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என்றவரிடம் 40 நாட்கள் தனியாக இருந்தது கடினமாக இல்லையா? என்று கேட்டபோது, ‘‘எனக் கான தகவல்களை சேகரிக்க இன்னும் ஒரு மாதம் விட்டிருந்தாலும் லண்டனில் இருந்திருப்பேன்’’ என்று புன்னகைத்தார் சத்யா.                                   

- ஸ்ரீதேவி மோகன்

× RELATED ஓட்டுநர் பார்த்த ‘படத்தால்’ லண்டன் நகர ரயிலில் பயணிகள் தர்மசங்கடம்