×

வலிமையான ஒன்றுபட்ட பாரதமாக, இந்தியா விளங்குவதற்கு பாரதியாரின் பாடல்கள் நமக்குத் துணை நிற்கின்றன : முதல்வர் பழனிசாமி உரை!!

சென்னை : பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் உலகளாவிய பாரதி திருவிழாவில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் ஆற்றிய உரை
    
வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் இந்த உலகளாவிய பாரதி திருவிழாவில் பங்கேற்பதில் தமிழனாய் மனம் மகிழ்கிறேன். தனது உரைகளில் மகாகவி பாரதியாரையும், திருவள்ளுவரையும், அதிகமாக மேற்கோள் காட்டி பேசும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு தமிழ்நாடு பொதுமக்கள் சார்பாக இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதி விருதினைப் பெறும் திரு. சீனி விஸ்வநாதன் அவர்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    
கவிஞர் மட்டுமல்லாது, சமூக ஆர்வலராக, பத்திரிக்கையாளராக, பாடலாசிரியராக, சுதந்திரப் போராட்ட வீரராக, பன்முகத் தன்மை கொண்டவர் பாரதியார் அவர்கள்.  தமிழ் இலக்கிய உலகு மட்டுமல்லாது, உலக இலக்கிய அரங்கிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நமது பாரதியார். அவருடைய படைப்புகளில் நாட்டுப்பற்று, தெய்வீகம், அன்பு, அறிவு, காதல், பக்தி, புரட்சி, கருணை, இரக்கம், தயவு, தியானம், யோகம், இசை, கலைகள், வேள்வி, அரசியல், வேதாந்தம், இதழியல் உள்ளிட்ட பல்வேறு உன்னத மனித உணர்வுகள் மிளிர்ந்தன.

தனது கவித்திறத்தால் மிக இள வயதிலேயே எட்டயபுரம் சமஸ்தானத்தில் அரசவைக் கவிஞராக திகழ்ந்த மகாகவி பாரதி,  சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனது பாடல்கள் மூலம் சுதந்திர வேட்கையை பாமர மக்களிடம் பரப்பி, சுதந்திர உணர்வினை துளிர்க்கச் செய்தார். தனது பாடல்களில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், பெண் விடுதலைக்கும், சமூக சீர்திருத்தங்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்.  பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண் விடுதலைக்காக பாடல்களை இயற்றினார்.  

பல்வேறு மொழிகளில் புலமை கொண்ட பாட்டுக்கொரு தலைவன் பாரதி, கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், எழுச்சியூட்டும் தேசிய கீதங்கள் இயற்றியபடியே, பத்திரிகையும் நடத்தினார். மிக எளிய நடையில் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் கவிதைகள், கட்டுரைகளை எழுதி மக்களிடையே அவர் ஏற்படுத்திய விடுதலை விழிப்புணர்வைக் கண்டு ஆங்கிலேயர்கள் அச்சமடைந்து பாரதியின் படைப்புகளுக்குத் தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், அவருக்கு சிறைத்தண்டனையும் விதித்தனர்.

சுதந்திர இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்று மிகப்பெரும் கனவுகளைச் சுமந்து கவிதைகள் புனைந்த தீர்க்கதரிசி கவிஞர் பாரதி, சுதந்திர இந்தியாவின் தொழில் வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி பற்றி
ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்!
வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்!   
என்று பாடினார்.
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
என்று பாடி தேச ஒற்றுமையைக் கூறியதோடு மட்டுமல்லாமல் வேளாண் பெருமக்களுக்கான பெரும் சந்தையைக் கனவு கண்டார்.
தமிழராகவும் தமிழ்நாட்டில் பிறந்ததற்காகவும் மிகவும் பெருமை கொண்ட பாரதியார், ‘செந்தமிழ் நாடு’ என்னும் கவிதையில்,
கல்வி சிறந்த தமிழ்நாடு
  புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு
என்று பாடி மகிழ்ந்தார்.    
தமிழ் மீது கொண்ட பற்றினால் தமக்கு பல்வேறு மொழிகளில் இருந்த புலமையினால் கண்டு தெளிந்து, தமிழ் மொழியினை
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
         இனிதாவது எங்கும் காணோம்  என்றும்,  
தமிழ்ப் புலவர்கள் பற்றி கூறும் போது,
  யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
  வள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
  பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
என்றும் பாடி பரவசம் அடைந்தார்.  

 எட்டயபுரத்து பாரதியாரின் சிந்தனைகள், எட்டுத் திசைகளிலும் ஒலிக்க வேண்டும் என்று மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு பாரதியாரின் பாடல்களை சீன மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்த்துள்ளது. மாண்புமிகு இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்கள் பாரதியார் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவினார்.   மேலும் மகாகவி பாரதியார் பெயரில் விருது வழங்கும் திட்டத்தை அவர் கொண்டுவந்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திருவல்லிக்கேணியில் தனியாரிடம் இருந்த பாரதி வாழ்ந்த இல்லத்தை வாங்கி புதுப்பித்து நினைவிடமாக மாற்றினார்.   
    
இன்றும் வலிமையான ஒன்றுபட்ட பாரதமாக, இந்தியா விளங்குவதற்கு பாரதியாரின் பாடல்கள் நமக்குத் துணை நிற்கின்றன. அவரது பிறந்த நாளில் பாரதியின் புகழைப் போற்றுவதிலும், அவரின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதிலும், அவரை வணங்குவதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க பாரதி!  வெல்க தமிழ்!    
நன்றி வணக்கம்!!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Bhartiyar ,India ,speech ,Palanisamy , Chief Palanisamy, Text
× RELATED நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு...