×

வேலை வாங்கி தருவதாக ரூ.1.86 கோடி மோசடி எம்டிசி மேலாண் இயக்குநர் கணேசனை 7 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு: கலக்கத்தில் போக்குவரத்து துறை உயரதிகாரிகள்

சென்னை: வேலை வாங்கி தருவதாக ரூ.1.86 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசனை, 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். வழக்கில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால் தொடர்புடைய உயரதிகாரிகள் தற்போது கலக்கத்தில் உள்ளனர். தமிழக போக்குவரத்து துறையில் 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தார். அந்த காலக்கட்டத்தில் மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துனர், ஓட்டுனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

அப்போது மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.1.86 கோடி மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பணம் கொடுத்து ஏமாந்தோர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து அதிகாரிகள் மூலம் பணம் பெற்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் கணேசனின் வீடு மற்றும் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் மோசடிக்கு தேவையான ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநர் கணேசனிடம் கடந்த செப்டம்பர் 11ம் தேதி 7 மணி நேரம் விசாரணை நடந்தது. பின்னர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த 9ம் தேதி நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் அளித்த தகவலின்படி தற்போது மாநகர போக்குவரத்து கழகத்தில் மேலாண் இயக்குநராக உள்ள கணேசனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். இதில் போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்பியதில் பணம் பெற்றுகொண்டு மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில் மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசனை நேற்று முன்தினம் கைது செய்தனர். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 25ம் தேதி வரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

விசாரணையின் போது மேலாண் இயக்குநர் கணேசன் மோசடியில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணேசனை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளார். இதனால் அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சேகரித்து கைது செய்யும் நோக்கில் கணேசனை 7 நாள் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மோசடிக்கு உடந்தையாக இருந்த போக்குவரத்து கழக உயரதிகாரிகள் பலர் ஓரிரு நாட்களில் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த போக்குவரத்து கழக உயரதிகாரிகள் பலர் ஓரிரு நாட்களில் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags : Ganesan ,MTC , 1.86 crore fraudulent job offer, MTC managing director Ganesan remanded in police custody for 7 days
× RELATED ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி