×

பாஜக வெற்றிவேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காதில் பூவை சுற்றி நண்டு நர்மதா நூதன போராட்டம்

குன்றத்தூர், :தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் வரும் 6-ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி, டிசம்பர் 6-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வெற்றிவேல் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். இந்த யாத்திரையை நடத்தும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை கண்டித்து அண்ணா நகரைச் சேர்ந்த நர்மதா (42), என்ற பெண் குன்றத்தூர், பெரிய தெருவில் உள்ள சேக்கிழார் மணிமண்டபம் முன்பு தனது காதில் தானே மல்லிகை பூவை சுற்றிக்கொண்டு இன்று காலை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் தமிழர்களின் காதில் பாஜக தலைவர் எல்.முருகன் பூ சுற்றுவதாகவும், இந்த வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக முதல்வர் அனுமதி அளிக்கக்கூடாது என்றும், சினிமா நடிகைகளையும், ரவுடிகளையும் கட்சியில் சேர்த்துக்கொண்டு முருகன் ரவுடிசத்தில் ஈடுபடுவதாக கூறி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் இதற்கு அனுமதி அளித்தால் அதிமுக சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்க நேரிடும், சேக்கிழாருக்கு தமிழக சட்டபேரவையில் சிலை வைக்க வேண்டும் என்றும், தெய்வ புலவர் சேக்கீழாருக்கு பாஜக ஏதும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். இவர் ஏற்கனவே தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டின் முன்பு நண்டு விடும் போராட்டம், தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வீட்டின் அருகே பாஜக கொடியை தூக்கில் போடும் போராட்டம், அண்ணா நகர் போலீஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து பாவாடை மாட்டும் போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Crab Narmada ,protest ,BJP , BJP, Victory, Pilgrimage, Crab Narmada New
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...