×

பங்குச்சந்தையில் வரலாறு காணாத சரிவு: முதலீட்டாளர்களுக்கு 3.3 லட்சம் கோடி இழப்பு

மும்பை: இந்திய பங்குச்சந்தைககள் நேற்று வரலாறு காணாத கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ₹3.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.  கொரோனா பரவல் துவங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன.  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், நேற்று முன்தினம் வர்த்தக முடிவில் 40,794.74 புள்ளிகளாக இருந்தது. நேற்று காலை ஏற்றத்துடன் 41,048.05 புள்ளிகளாக இருந்தது. அதன் பிறகு பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை நோக்கிச் சென்றன. அதிகபட்சமாக 39,667.47 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1066.33 புள்ளிகள் சரிந்து, 39,728.41 புள்ளிகளானது. முந்தைய நாள் வர்த்தகத்தை விட இது 2.61% சரிவு.

இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, வர்த்தக முடிவில் 290.70 புள்ளிகள் சரிந்து 11,680.35 ஆக இருந்தது. இது முந்தைய நாள் வர்த்தகத்தை விட 2.43% சரிவு. அதாவது, தொடர்ந்து 10 நாள் ஏற்றத்துக்கு பிறகு, இந்திய பங்குச்சந்தைகள் நேற்று மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
 * அமெரிக்காவில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஊக்க சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் நுசின், அதிபர் தேர்தலுக்கு முன்பு சலுகைகள் அறிவிக்க வாய்ப்பு இல்லை என கூறியதாலும், நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் பெரிய அளவில் நம்பிக்கை தராததாலும், அங்கு பங்குச்சந்தைகள் சரிந்தன.
* அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப்போர் முடிவுக்கு வருவதாக இல்லை. அதிலும், சீனாவின், அலிபாபா நிறுவனத்துடன் இணைந்த ஆண்ட் குரூப்பை, அதன் பங்கு வெளியிட்டுக்கு முன்பே வர்த்தக தடைப்பட்டியலில் டிரம்ப் நிர்வாகம் சேர்த்துள்ளது. இதனால், வர்த்தகப்போர் முடிவுக்கு வர வாய்ப்பை என்ற முடிவுக்கு முதலீட்டாளர்கள் வந்து விட்டனர்.
* ஐரோப்பிய பங்குகள் துவக்கத்திலேயே கடும் சரிவைச் சந்தித்தன. ஜெர்மனியின் டிஏஎக்ஸ் 3.02%, லண்டனின் எப்டிஎஸ்இ 100 2.31 சதவீதம், பிரான்சின் சிஏசி 2.38 சதவீதம், அமெரிக்க பங்குச்சந்தைகள் 1.8 சதவீதம் வரையிலும் சரிந்தன. இது இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது.
* அதோடு, மத்திய அரசின் ஊக்குவிப்பு சலுகை திட்டங்கள்  போதுமானதாக இல்லாததும் முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை  அளித்துள்ளது. இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை, தகவல் தொழில்நுட்பத்துறை  மற்றும் வங்கிப் பங்குகள் அதிகமாக சரிந்தன. முதலீட்டாளர்கள் இவற்றை லாப  நோக்கத்துடன் விற்கத் துவங்கினர். இதனால் தொடர்ந்து 10 நாட்கள் ஏற்றம்  அடைந்த இந்திய பங்குச்சந்தையில், நேற்று ஒரே நாளில் 1,60,56,605.84  கோடியாக இருந்த பங்குகளின் மதிப்பு 3,25,464.52 கோடி சரிந்து,  157,31,141.32 கோடியானது.



Tags : investors , Unprecedented decline in the stock market: 3.3 lakh crore loss to investors
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு