×

உச்சம் தொட்ட கொரோனா... மிச்சம் தொடுவது எப்போது..?

நன்றி குங்குமம்

இந்திய அளவில் கொரோனா உச்சத்தை அடைந்து ருத்ர தாண்டவம் ஆடிவிட்டது. ஏறுமுகமாக இருந்த கொரோனாவிற்கு இனிமேல் இறங்கு முகம்தான் என்று ஒரு பக்கத்தினர் சொல்ல, இன்னொரு பக்கம் இதைவிட கொடுமையான இரண்டாம் அலை காத்திருக்கிறது என்று பீதியைக் கிளப்புகின்றனர். இந்நிலையில் வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் எப்படியிருக்கும் என்று பிரபல நுண்கிருமி மருத்துவரும் சிஎம்சி மருத்துவமனையின் ஓய்வு பெற்ற மருத்துவருமான ஜேக்கப் ஜானிடம் கேட்டோம். ‘‘செப்டம்பர் 5 முதல் 18ம் தேதிக்கு இடையிலான 2 வாரத்தில் ஏற்பட்ட தொற்றின் தினசரி சராசரி 91,801. செப்டம்பர் 5க்கு முற்பட்ட ஒரு வாரத்தில் தினசரி சராசரி 79,857. அதேபோல செப்டம்பர் 18க்குப் பிறகான ஒரு வாரத்தில் தினசரி சராசரி 85156. இந்தக் கணக்குகளை வைத்துப் பார்த்தால் செப்டம்பர் மாதத்தின் இடைப்பட்ட வாரமான 5லிருந்து 18 வரைக்குமான 2 வார காலத்தை இந்தியாவில் கொரோனாவின் உச்ச காலமாகக் கொள்ளலாம்...’’ என்று ஆரம்பித்த ஜேக்கப்பிடம், ‘சென்னையில் தொற்று அதிகமாகிக்கொண்டே செல்கிறது. பல மாநிலங்களில் பரிசோதனை செய்வது குறைந்திருக்கிறது. இவற்றை வைத்து இனிமேல் கொரோனாவின் தாக்கம் குறையலாம் என்று சொல்லலாமா..?’ என்றோம். ‘‘இந்தக் கணிப்புக்கு ஆதாரமாக அரசின் ஆய்வு ஒன்றை இதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாக இருக்கும்.

உதாரணமாக, கொரோனாவை கண்காணிக்கும் ஐசிஎம்ஆர் அமைப்பு கடந்த மே மாதம் இந்திய அளவில் ‘செரோ சர்வே’ என்னும் ஒரு இரத்தப் பரிசோதனையை நடத்தியது. இந்தியாவில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என ஊர்ஜிதமானால், சுமார் 80 - 100 பேருக்காவது அறிகுறியில்லாத தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அந்த ஆய்வு சொன்னது. இந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் இதுவரை 60 லட்சம் பேருக்கு பாசிட்டிவ். 60 லட்சத்தை 80-ஆல் பெருக்கினால் 48 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி என்று வைத்துக்கொண்டால் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் சதவீதம் 30 - 35...’’ என்ற  ஜேக்கப், ‘‘இந்தியாவில் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக ஏறி செப்டம்பர் மத்தியில் உச்சத்தை தொட்டதைப் போல  கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இறங்கி வந்து மார்ச் மாதத்தில் முற்றாகக் குறையும்...’’ என்றார். ‘‘அதாவது ஆகஸ்ட் மாத பாதிப்பு போல அக்டோபரில் இருக்கும், ஜூலை மாதிரி நவம்பரிலும், ஜூனைப் போல டிசம்பரிலும் இருக்கும். இறுதியில் இந்தியாவில் கொரோனா ஆரம்பித்த மார்ச் மாதம் போல வரும் ஆண்டின் மார்ச் மாத பாதிப்புக்கு வந்து கொரோனா குறையும்...’’ என்கிற ஜேக்கப்பிடம் ‘இந்த தொற்று மந்தைப் பாதிப்பு எனும் பெரும்பாலானோரைப் பாதித்துவிட்டுத்தான் ஒழியுமா… இதுதான் உலகநாடுகளிலும் காணக்கூடியதாக இருக்கிறதா..?’ என்றோம். ‘‘மக்கள்தொகையில் 30 - 40 சதவீதத்தினரைப் பாதித்தாலே மந்தைப் பாதிப்பு என்னும் ஹெர்ட் இம்யூனிட்டி தொடங்கிவிட்டது எனலாம்.

மந்தைப் பாதிப்பின் மூலம் உச்சம் தொட்ட கொரோனா, அடுத்த கட்டத்தில் குறைவான நபர்களையே தொற்றும். பலரையும் ஏற்கனவே தொற்றியிருப்பதால் அதன் வீரியம் குறைந்துகொண்டே வரும். முன்பு ஒருவர் மூலம் 80 பேருக்கு பரவுகிறது என்றால் வீரியம் குறையக் குறைய தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் குறையும். ஆனாலும் கொரோனா உச்சத்தை தொட்ட மாதிரியே கடிகார வடிவில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறையும்...’’ என்றவர் தடுப்பூசி, கொரோனா சோதனைகள், அரசு முயற்சிகள் பற்றியும் விளக்கினார். ‘‘ஊரடங்கு, முகக்கவசம், கைகழுவுதல், மருத்துவமனை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு, தடுப்பூசி போன்ற நோய் தடுக்கும் முயற்சிகள் இல்லாவிடில் குறைந்த காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படும். மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால், இந்த மந்தைப் பரவல் என்பது தொற்றானவருக்கும், அதனால் பாதிக்கப்படும் நோயாளிக்கும் இடையே ஒரு கால அவகாசத்தைக் கொடுக்கிறது. அதனால் இந்தத் தொற்றிலிருந்து அரசும் மக்களும் கவனமாக அணுகவும் அதிலிருந்து விடுபடவும் நேரம் கிடைக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மந்தைப் பரவலாலும் அரசு மற்றும் மக்கள் கட்டுப்பாட்டாலும்தான் கொரோனாவின் பாதிப்புகளைக் குறைக்க முடியும் ...’’ என்று அழுத்தமாக முடித்தார் ஜேக்கப்.

தொகுப்பு: டி.ரஞ்சித்

Tags : Corona , Corona touching the top ... when will the rest touch ..?
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...