×

ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடே வராது: நீர்வளத்துறை நிபுணர்கள் தகவல்

சிறப்பு செய்தி
நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு ஏரிகளின் நீர்மட்டம் சரித்துள்ளது. இதனால் பெங்களூருவை தொடர்ந்து, சென்னையில் குடிநீர் தட்டுப்பாடுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணக்கோட்டை – தேர்வாய்கண்டிகை, வீராணம் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. 5 ஏரிகளிலும் மொத்தம் 8.4 டிஎம்சி மட்டுமே தற்போது இருப்பு இருக்கிறது. வீராணம் ஏரி நீர் இன்றி வறண்டு போய்விட்டது.

2003 மற்றும் 2019ம் ஆண்டு மிக கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை சந்தித்தது. அதுபோன்ற நிலை இந்தாண்டு ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், மாறி வரும் பருவநிலைகள் காரணமாக எதிர்காலத்தில் மற்றொரு வறண்ட கோடைகாலத்தை சென்னை மட்டுமல்லாமல் எந்த பெரிய நகருமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். எனவே இந்த கோடையை சென்னை சமாளிக்கும் வகையில் ஏரிகளில் தண்ணீர் உள்ளது. ஏரி நீர்வறண்டாலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கைகொடுக்கும் என நீர்வளத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:
வீடுகளுக்கு குழாய் மூலமும், லாரிகள் வழியாகவும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க முடியாத பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு சென்று நிரப்பி வருகிறது. சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் குறைந்து கொண்டே வருகிறது. இருந்த போதிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நீர்வளத்துறை மற்றும் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் தினமும் 1,13,700 நடைகள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது அது 1.15 லட்சம் நடைகளாக உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 20 லாரிகள் கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது. தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் இலவசமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி மக்கள் தனியார் குடிநீர் லாரிகளை நம்பி உள்ளனர். அவர்களுக்கும் டயல் குடிநீர் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வீராணம் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டுவரப்படும். கடந்த ஆண்டு வீராணம் ஏரியில் 712 மில்லியன் கன அடி நீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஏரி முற்றிலுமாக வற்றியுள்ளது. மேலும், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு கொண்டுவரப்படும். இந்த திட்டத்திலிருந்து ஒரு ஆண்டுக்கு 12 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் இதுவரை நீர் கிடைத்ததில்லை.

ஆந்திராவில் மழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளம் ஏற்படும் போது, தானாக வரும் நீர், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தேவைப்படும் போது கிடைக்கபடுவதில் சிரமம் ஏற்படுகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல், தேர்வாய்கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகளை சேர்த்து 8.4 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் அதிகமாகவே உள்ளது. இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடு. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள நீர்வளத்துறை தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நீர்வள மேலாண்மை நிபுணர் கூறியதாவது:
சென்னையின் ஏரிகளில் வரும் நாட்களில் நீர் இருப்பு மேலும் குறையும். இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. சென்னையில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க உதவும். இந்த ஆலைகளிலிருந்து ஒரு நாளுக்கு 350 எம்.எல்.டி தண்ணீர் கிடைக்கும். ஜூன் மாதத்துக்கு பிறகு தெலுங்கு கங்கை திட்டத்திலிருந்து சென்னைக்கு நீர் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கைகொடுக்கும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை 2010ம் ஆண்டு சென்னையில் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. சென்னையின் வடக்கில் மீஞ்சூரில் அமைக்கப்பட்ட அந்த ஆலை ஒரு நாளுக்கு 100 மில்லியன் லிட்டர் நீரை வழங்குகிறது. அதேபோல் சென்னையின் தென் திசையில் உள்ள நெம்மேலி ஆலையும் 100 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு வழங்குகிறது. மேலும் நெம்மேலியில் ரூ.1516 கோடியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் தரக்கூடிய மற்றொரு ஆலை கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இதன் மூலம் நாளொன்று 350 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைப்பதால் ஏரிகளில் வறட்சி ஏற்பட்டாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

The post ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடே வராது: நீர்வளத்துறை நிபுணர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bengaluru ,Dinakaran ,
× RELATED பள்ளிகொண்டா அருகே முந்தி செல்ல முயன்ற...