×

இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்

* 50 ஆண்டுகளுக்கு மேல் உதயசூரியனை தக்க வைத்திருக்கும் திமுக
* கட்சி பிளவால் கண்டெடுக்கப்பட்ட சின்னத்தின் கதைகள்

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் திருவிழா தமிழகத்தில் தற்போது களைகட்டியுள்ளது. தலைவர்களின் பரப்புரை, தேர்தல் அறிக்கை, வெற்றி வியூகம் என சூரியனின் வெப்பத்தை காட்டிலும் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. அதன்படி, நாளை நம் ஆட்காட்டி விரலில் அடையாள மையிட்டு, விரும்பும் கட்சிகளின் சின்னங்களில் வாக்களிப்பதன் மூலம் நமது வாக்குரிமையைப் பயன்படுத்த இருக்கின்றோம். நம்மால், நமக்காக ஆள இருக்கின்ற நமது பிரதிநிதிகளை நம்முடைய விரல்களின் பலத்தால் வாக்களித்து தேர்ந்தெடுக்க இருக்கிறோம். நம் ஒவ்வொருவரின் வாக்குரிமைதான் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. எனவேதான், பாமரரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சின்னங்கள் கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. அதன்படி, ஒரு வேட்பாளரின் வெற்றியோ தோல்வியோ அதனை நிர்ணயிக்கும் சக்தியாக சின்னங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

இந்தியாவின் முதல் தேர்தல் (1951-52) அறிவிக்கப்பட்டபோது, நாட்டில் எழுத்தறிவு பெற்றிருந்தோர் குறைந்த எண்ணிக்கையில் இருந்த காலம். அதன்படி, அவர்கள் தங்கள் வாக்குகளை மாற்றி அளித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அப்போதைய இந்திய தேர்தல் ஆணையர் சுகுமார் சென். அதன்படி, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னத்தை ஒதுக்கினால் வாக்காளர்கள் அதனை நினைவு வைத்து தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்குகளை எளிதில் செலுத்தலாம் என எண்ணினார். அந்தவகையில், வாக்காளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள அவர்கள் அன்றாடம் பார்க்கும் சேவல், கோழி, ஏர்கலப்பை, சூரியன், அரிவாள், கத்தி போன்வற்றை சின்னமாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இதுதான் இந்தியாவிலேயே முதன்முறையாக சின்னங்களை பயன்படுத்த போடப்பட்ட விதை. அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு சின்னம் வந்த கதை பின்வருமாறு:

இரட்டைமலை சீனிவாசனின் உதயசூரியன் திமுக வசமானது இந்தியாவின் முதல் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் போட்டியிடவில்லை. இதற்கு அடுத்து 1957ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தான் அண்ணா தலைமையிலான திமுக போட்டியிட்டது. அந்த தேர்தலின் போது தங்களின் கட்சிக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அண்ணா, தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டார். ஆனால், தேர்தல் ஆணையம் உதயசூரியன் சின்னத்துடன் சேர்த்து சேவல் சின்னத்தையும் ஒதுக்கீடு செய்தது. இதற்கு ஒரு காரணம் உண்டு. அண்ணா கேட்ட உதயசூரியன் சின்னத்தை முதன்முறையாக பயன்படுத்தியவர் இரட்டைமலை சீனிவாசன். அவர் தான் 1936ம் ஆண்டு சென்னை மாகாண பட்டியல் சாதிகள் கூட்டமைப்பை தொடங்கி அந்த அமைப்பின் சின்னமாக உதயசூரியன் சின்னத்தை வைத்திருந்தார்.

தனது பெயரில் உள்ள இரட்டை மலையை வரைந்து அதிலிருந்து விடியலுக்கான சூரியன் உதிப்பது போல வடிவமைத்திருந்தார். இதன் காரணமாக அவரது கட்சி சூரிய கட்சி என்றும் மக்களால் அழைக்கப்பட்டது. இதுதவிர செங்கல்பட்டில் 1929ல் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டிலும் உதயசூரியன் சின்னம் பயன்படுத்தப்பட்டது. இப்படி, உதயசூரியன் மற்றும் சேவல் சின்னத்தை பெற்ற திமுக அந்த பொதுத்தேர்தலில் பெருவாரியாக வாக்குகள் பெற்றதன் காரணமாக 1958ம் ஆண்டு திமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையத்திடம் சான்றிதழ் பெற்று உதய சூரியனையும் கைப்பற்றியது. இதில் சுவாரசியமான ஒன்று என்னவென்றால் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் சேவல் சின்னத்திலும், கலைஞர் உதயசூரியன் சின்னத்திலும் நின்றனர்.

அப்போது தேர்தல் பரப்புரையில் கலைஞர் ‘‘மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை, போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை’’ என முழங்கினார். இந்த எழுச்சிமிகு பேச்சால் தான் மக்களின் இதய சூரியனில் நிரந்தர இடத்தை உதயசூரியன் பெற்றதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை இந்தியாவிலேயே 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கட்சியின் சின்னம் உள்ளது என்றால் அது உதயசூரியன் மட்டுமே.

திண்டுக்கல்லில் துளிர்விட்ட இரட்டை இலை
எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகி 1972ம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார். எம்.ஜி.ஆர் கட்சியை ஆரம்பித்த அடுத்த ஆண்டே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தலாமா வேண்டாமா என பல வாத பிரதிவாதங்களுக்கு பிறகு இடைத்தேர்தலை சந்திப்பதற்கு தயாரானார் எம்.ஜி.ஆர். இந்த தேர்தலில் வேட்பாளராக அதிமுக சார்பில் மாயத்தேவர் களமிறக்கப்பட்டார். தேர்தலில் போட்டியிட அதிமுகவிற்கு சின்னம் எதுவும் இல்லை. எனவே, 16 சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரி மாயத்தேவரிடம் வழங்கினார்.

அதில் 7வது இடத்தில் இருந்த இரட்டை இலை மாயத்தேவரை வெகுவாக கவர்ந்தது. அதன்படி, இரட்டை இலையை அதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு அவர் கோரிக்கை விடுத்தார். அப்படி தேர்வு செய்யப்பட்டது தான் அதிமுகவிற்கான இரட்டை இலை. இந்த தேர்தலில் முதன் முறையாக அதிமுக வெற்றி பெற்றது. அப்போது இரட்டை இலையை ஏன் சின்னமாக தேர்வு செய்தீர்கள் என எம்.ஜி.ஆர் மாயத்தேவரிடம் கேட்க, வெற்றிக்கான குறியீடாக இரண்டு விரலை உயர்த்துவதை மையமாக கொண்டு தான் இரட்டை இலையை தேர்வு செய்தேன் என பதில் அளித்துள்ளார். எம்.ஜி.ஆரை படுத்துக்கொண்டே வெற்றி பெற வைத்த சின்னமாக இரட்டை இலை இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் இரட்டை காளை சின்னம்
திமுக – அதிமுக கட்சிகளுக்கு முன்பு இருந்தே தேர்தலில் களம் காணும் காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னம் என்பது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தான் கிடைத்தது. அதாவது 1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரட்டை காளைகள் பூட்டிய மாடுகள் சின்னம் தான் இருந்தது. 1969ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இந்திரா காங்கிரஸ் மற்றும் ஸ்தாபன காங்கிரஸ் என இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. எனவே, இந்திரா காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னமும், ஸ்தாபன காங்கிரசுக்கு கைராட்டை சுற்றும் பெண் சின்னமும் ஒதுக்கப்பட்டன. 1975 முதல் 1977 வரை எமர்ஜென்சி காலத்திற்கு பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

அதன்பின்னர், இந்திரா காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னம் பறிபோனது. இதனையடுத்து சைக்கிள், யானை, கை போன்றவற்றில் ஒன்றை தேர்வு செய்துக்கொள்ளும்படி தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அப்போது இந்திரா காந்தி தேர்வு செய்த சின்னம் தான் ‘கை’ சின்னம். இது நடந்தது 1978ம் ஆண்டு. அன்று முதல் இன்று வரை கை சின்னத்திலேயே காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

சுயேச்சை சின்னமான தாமரை
ஜனதா கட்சியில் இருந்த வாஜ்பாய் மற்றும் சில தலைவர்கள் 1980ம் ஆண்டு பாஜவை தோற்றுவித்தனர். இந்த கட்சிக்கு ஏர் உழவன் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கட்சியை முறைப்படி பதிவு செய்யாததை காரணம் காட்டி சுயேச்சை சின்னமான தாமரை சின்னத்தை பாரதிய ஜனதாவிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

பிளவால் உருவான கம்யூனிஸ்ட் சின்னங்கள்
இந்தியாவிலேயே மிகப்பெரிய பிளவால் உருவானவை தான் கம்யூனிஸ்ட் சின்னங்கள். 1960ம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே கருத்து மற்றும் சித்தாந்தம் அடிப்படையில் சண்டைகள் எழத்தொடங்கின. இவை பூதாகரமாக வெடித்தது இந்தியா – சீனா போரில் தான். இந்தியாவின் மீது ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாகவும், சீனா ஆதரவை எடுத்தவர்கள் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகவும் பிரிந்தன. இப்படித்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கதிர் அரிவாள் சின்னமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரிவாள் சுத்தியல் சின்னமும் வந்தடைந்தன.

யானை சின்னத்தில் போட்டியிட்ட பாமக
பாட்டாளி மக்கள் கட்சி 1989ம் ஆண்டு தொடங்கி முதன்முறையாக தேர்தலை சந்தித்த போது யானை சின்னத்தில் நின்று 5.8% வாக்குகளை பெற்றது. அதனை தொடர்ந்து 1991 மற்றும் 1996 தேர்தலில் யானை சின்னத்தில் தமிழகத்தில் பாமக போட்டியிட்டது. அதேபோல், யானை சின்னத்தில் பகுஜன் சமாஜ், அசாம் கண பரிஷத் போன்ற கட்சிகளும் போட்டியிட்டன. பின்னாளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக வலிமையடைய தங்களுக்கு நாடு முழுவதும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு யானை சின்னத்தை மாயாவதி கைப்பற்றினார். இதில் பாமகவின் யானை சின்னம் பறிபோக அடுத்து நடந்த 1998 தேர்தலில் தான் மாம்பழம் சின்னத்தில் பாமக போட்டியிட்டது. அப்போது முதல் தற்போதைய தேர்தல் வரை மாம்பழம் சின்னத்திலேயே பாமக போட்டியிடுகிறது.

மூப்பனாரின் சைக்கிள் சின்னம்
காங்கிரசில் இருந்து விலகிய மூப்பனார் 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அப்போது அக்கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1996ல் முதன்முறையாக களம் கண்ட தமாகா திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது. அப்போது திமுகவிற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவை அளித்திருந்தார். தமாகா- திமுக கூட்டணி சேர்ந்ததால் சைக்கிள் சின்னத்தை பட்டிதொட்டியெங்கும் பரப்பும் முனைப்பில் திரைப்படங்களிலும் சைக்கிளை அதிகம் பயன்படுத்தும் காட்சிகளை வடிவமைத்துக்கொண்டார்.

அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தமாகா – திமுக கூட்டணி பெற்றது. அதன்பின்னர் 2014ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய வாசன் மீண்டும் தமாகவை தொடங்கினார். அதனை தொடர்ந்து மீண்டும் தங்கள் தரப்பிற்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு செய்ய ஜி.கே.வாசன் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கையை முன்வைக்க, தேர்தல் ஆணையம் கால தாமதம் செய்யவே தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஜி.கே.வாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் சைக்கிள் வந்தடைந்துள்ளது.

பம்பரத்தை சுழற்றிய வைகோ
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வைகோ, மறுமலர்ச்சி திமுகவை தொடங்கினார். அதன்படி, 1996ம் ஆண்டு போட்டியிட்ட வைகோவிற்கு குடை சின்னத்தை வழங்கியது தேர்தல் ஆணையம். இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதன் பின்னர், 1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வைகோவிற்கு பரம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கணிசமான வாக்குகளை பெற்றதால் பம்பரம் சின்னத்திற்கான அங்கீகாரம் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து, நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்கு சதவீதம் குறைந்ததன் அடிப்படையில் பரம்பரம் சின்னத்திற்கான அங்கீகாரத்தை மதிமுக இழந்தது. தற்போதைய தேர்தலில் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது

தேமுதிகவிற்கு கிடைத்த முரசு
மதுரையில் கடந்த 2005ம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற கட்சியை லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் தொடங்கினார். இதனையடுத்து அடுத்தாண்டே நடந்த சட்டமன்ற தேர்தலில் களம் கண்ட விஜயகாந்திற்கு தேர்தல் ஆணைத்தால் முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில், 232 தொகுதிகளில் முரசு சின்னமும், கடயநல்லூர் மற்றும் நெல்லை தொகுதிகளுக்கு மட்டும் தேமுதிகவிற்கு மோதிரம் சின்னமும் ஒதுக்கப்பட்டன. இந்த தேர்தலில் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியை கைப்பற்றி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். விஜயகாந்தை தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் கணிசமாக வாக்குசதவீதம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் 2009ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையம் மறுக்க உயர்நீதிமன்றம் மூலமாக மீண்டும் தேமுதிக முரசு சின்னத்தை கையகப்படுத்தியது.

இதனையடுத்து நடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 இடங்களை பிடித்து தனக்கான அங்கீகாரத்தை தேமுதிக பெற்றது. இதனையடுத்து காலப்போக்கில் அடுத்தடுத்து நடைபெற்ற நாடளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்துள்ளது. இருப்பினும், தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தனக்கான வாக்குவங்கியை தேமுதிக தக்கவைக்குமா என்ற கேள்விக்கான விடை மக்கள் கையில் தான் உள்ளது.

The post இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Udayasuriyan ,Tamil Nadu ,Indian Democratic Elections ,
× RELATED சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’...