×

பொருளாதார சுதந்திர குறியீடு தரவரிசை 26 இடங்கள் பின்தங்கியது இந்தியா: 79ல் இருந்து 105க்கு தள்ளப்பட்டது

புதுடெல்லி: பொருளாதார சுதந்திர குறியீடு தரவரிசை பட்டியலில், இந்தியா 26 இடங்கள் பின்தங்கி, 105வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து இந்தியா நடப்பு ஆண்டில் மீள்வதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை. மாறாக, கடும் சரிவை சந்திக்கும் என்று, பொருளாதார நிபுணர்கள், நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த சூழ்நிலையில், உலக பொருளாதார சுதந்திரம் 2020 குறித்த ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 162 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவின் தர வரிசை 105வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்பு இந்த வரிசையில் இந்தியா 79வது இடத்தில் இருந்தது.

விதிமுறைகளை பொறுத்தவரை இந்தியாவின் தர வரிசை 114வது இடத்தில் இருந்து 122வது இடத்துக்கு சரிந்துள்ளது. இதுபோல் அரசு செலவினங்கள் 36வது இடத்தில் இருந்து 54வது இடத்துக்கு வந்துள்ளது. சொத்துரிமை மற்றும் சட்ட அமைப்புக்கான தர வரிசை எந்த மாற்றமும் இன்றி 79வது இடத்தில் நீடிக்கிறது. பணத்தின் மதிப்பு 89வது இடத்தில் இருந்து 88வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வது தொடர்பான தர வரிசையில் 137வது இடத்தில் இருந்து 139வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த அளவில் 79வது இடத்தில் இருந்து 105வது இடத்துக்கு வந்துள்ளது.

அதாவது, பொருளாதார சுதந்திர குறியீடு தரவரிசையில் 26 இடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. முதல் இடத்தில் ஹாங்காங் உள்ளது. இதை தொடர்ந்து சிங்கப்பூர், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா உள்ளன. இந்தியா 105வது இடத்திலும், சீனா 124வது இடத்திலும் உள்ளது. 10 குறியீடுகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது தரவரிசைக்கான மதிப்பெண் அடிப்படையில் அரசு செலவினங்கள் 8.22ல் இருந்து 7.16 ஆகவும், சட்ட அமைப்பு மற்றும் சொத்துரிமை 5.17ல் இருந்து 5.07 ஆகவும், சர்வதேச அளவில் வர்த்தகம் 6.08ல் இருந்து 5.71 ஆகவும், கடன், தொழிலாளர் மற்றும் வர்த்தக கட்டுப்பாட்டு விதிகளுக்கான புள்ளி 6.69ல் இருந்து 6.53 ஆகவும் குறைந்துள்ளது என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags : India , Economic and Independent Index rankings, 26 places, India slipped from 79 to 105
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!