×

தென்மாவட்ட பகுதிகளில் செப். 7 முதல் 4 சிறப்பு ரயில்கள்: மதுரை கோட்ட அதிகாரி தகவல்

மதுரை: மதுரை கோட்டத்திற்குட்பட்ட தென்மாவட்டங்களில் வரும் 7ம் தேதி முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) நிகில் விடுத்துள்ள அறிக்கை:கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து வரும் 7ம் தேதி முதல் துவங்குகிறது. மதுரை கோட்ட  அளவில், முதற்கட்டமாக, சென்னை எழும்பூர் - காரைக்குடி, சென்னை எழும்பூர் - மதுரை, சென்னை எழும்பூர் - தூத்துக்குடி ஆகிய 3 ரயில்  நிலையங்களுக்கிடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.காரைக்குடி - சென்னை எழும்பூர்  சிறப்பு ரயில் (வண்டி எண் 02606) வரும் 7ம் தேதி (திங்கள்) காரைக்குடியிலிருந்து அதிகாலை 4.55 மணிக்கு  புறப்பட்டு பகல் 12.10 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூர் - காரைக்குடி சிறப்பு ரயில் (வண்டி எண் 02605)  சென்னையிலிருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.

இதேபோல், மதுரை - சென்னை எழும்பூர்  சிறப்பு ரயில் (வண்டி எண் 02636) வரும் 7ம் தேதி மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு பிற்பகல்  2.35 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூர் - மதுரை சிறப்பு ரயில் (வண்டி எண் 02635) சென்னையிலிருந்து பகல்  1.40 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த இரு சிறப்பு ரயில்களிலும், 3 குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள், 11  இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 1 உணவு வினியோக பெட்டி, மூன்று இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.மதுரை - சென்னை எழும்பூர்  சிறப்பு ரயில் (வண்டி எண் 02638) வரும் 7ம் தேதி மதுரையிலிருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை  5.15 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூர் - மதுரை சிறப்பு ரயில் (வண்டி எண் 02637) சென்னையிலிருந்து செப். 8ம்  தேதி (செவ்வாய்) இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு மதுரை சென்று சேரும். இந்த ரயிலில், ஒரு குளிர்சாதன முதல்  வகுப்பு பெட்டி, மூன்று குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம்  வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும்.

இதேபோல், தூத்துக்குடி - சென்னை எழும்பூர்  சிறப்பு ரயில் (வண்டி எண் 02694) வரும் 7ம் தேதி தூத்துக்குடியிலிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்-தூத்துக்குடி சிறப்பு ரயில் (வண்டி எண் 02693)  சென்னையிலிருந்து செப்.10ம் தேதி (வியாழன்) இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இந்த  ரயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி  பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும்.இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (செப். 5) காலை 8 மணி முதல் துவங்குகிறது. ரயில்வே வாரியத்தின் வழிகாட்டுதல்படி,  பயணிகள் ரயில் நிலையத்திற்குள் நுழையும் முன்பு உடல் வெப்ப பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாத  பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Southern Districts. ,Madurai , Sep, Southern,Special, Trains, Madurai ,
× RELATED பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்