வனப்பகுதியில் மாடு தேடியவர்களை விரட்டிய சிறுத்தைகள் : ஆம்பூர் அருகே பரபரப்பு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே வனப்பகுதியில் காணாமல் போன மாட்டை தேடி சென்றவர்களை அங்கிருந்த சிறுத்தைகள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான போட்டிகளில் கலந்து கொள்ளும் காளை கடந்த சில நாட்களுக்கு முன் தப்பி சென்றது. இதை ஆம்பூர் அருகே கடந்த ஒரு வாரமாக செல்வம் தரப்பினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா அருகே காளை மாடு திரிவதை அறிந்த செல்வம் மற்றும் அவரது தரப்பினர் அங்கு சென்றனர். சுட்டகுண்டாவில் இருந்து ஆந்திர மாநிலம், பெத்தூர் செல்லும் பழைய மிலிட்டரி சாலையில் சிலா மரத்து பாறை என்னுமிடத்தில் சென்றனர்.

அப்போது, அங்கு 3 சிறுத்தைகள் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை தின்று கொண்டிருப்பதை கண்டனர். இதைப்பார்த்த சிறுத்தைகள் கூட்டமாக வந்தவர்களை கண்டதும் உறுமியபடி துரத்தியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உயிர் பயத்தில் தப்பித்தோம், பிழைத்தோம் என அங்கிருந்து தப்பி வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>