×

பூவராகசாமி கோயில் குளத்தில் இறந்து கிடக்கும் மீன்கள்: அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்த கோரிக்கை

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசாமி கோயில் அமைந்துள்ளது. அதன் பின்புறம் கோயில் குளம் உள்ளது. இந்த  குளத்தையொட்டி, அஸ்வத்தநாராயணன் கோயில் உள்ளது. பூவராகசாமி கோயில், நித்தீஸ்வரநாராயணன் கோயில், அஸ்வத்தநாராயணன் ஆகிய கோயிகளுக்கு வரும் பக்தர்கள் இந்த திருக்குளத்தில் குளித்த  பின்னரே கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 18ம் தேதி ஆடி பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதிகள் தங்களது மாலைகளை குளத்தில் விட்டு கோயிலில் வழிபாடு செய்து  சென்றனர். இதனால் குளத்தில் குப்பைகள் அதிகளவில் சேர்ந்து அசுத்தம் ஏற்பட்டுள்ளது.

 இதனை கோயில் நிர்வாகம் அகற்றவில்லை. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் சிறப்பு வாய்ந்த  இக்கோயிலின் குளத்தில் சாம்பு, துணி பவுடர் உள்ளிட்டவற்றின் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. அவற்றை  அகற்றாமல் உள்ளதால் கோயில் குளம் அசுத்தம் அடைந்துள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று குளத்தில் இருந்த  மீன்கள் அதிகளவில் இறந்துள்ளது. இதனால் கோயில் குளம் மேலும் அசுத்தமாகி துற்நாற்றம் வீசுகிறது. எனவே பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் சார்பில் குளத்தில் உள்ள குப்பைகள், இறந்து கிடக்கும் மீன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : temple pond ,cleaning , Dead ,fish ,Poovarakasamy, temple,disposal ,cleaning
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...