ஓணம் பண்டிகை நெருங்கும் நிலையில், ஆடைகள் தேக்கத்தால் குமரி நெசவாளர்கள் வேதனை

கன்னியாகுமரி:  ஊரடங்கு காரணமாக ஓணம் பண்டிகைக்கு தயாரித்துள்ள கேரள பாரம்பரிய உடைகளை அம்மாநிலத்திற்கு அனுப்ப முடியாததால், குமரி மாவட்ட நெசவாளர்கள் வேதனையடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பல தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது குமரி மாவட்ட நெசவாளர்கள் உற்பத்தி செய்த ஆடைகளை கேரளாவிற்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

கேரள மக்கள் அணியும் பாரம்பரிய உடைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், வடசேரி, பள்ளியப்பாடி, தேங்காய்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஓணம் பண்டிகையன்று கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து, பாடல்கள் பாடியும் மகிழ்வது வழக்கம். இந்த நிலையில் ஓணம் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட உடைகள் கேரளாவிற்கு அனுப்ப முடியாமல் நெசவாளர்கள் பெரும் இழப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

ஊரடங்கு காரணமாக ஆடைகள் தேக்கமடைந்துள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள ஊதியத்தை வழங்குவதிலும் சிக்கல் நிலவுவதாக நெசவாளர்கள் கூறுகின்றனர். எனவே, உற்பத்தி செய்த ஆடைகளை கேரளா கொண்டு சென்று விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதிக்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>