×

5 நாட்களுக்கு பிறகு திடீர் மாற்றம் தங்கம் சவரனுக்கு 192 அதிகரிப்பு: நகை வாங்குவோர் மீண்டும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை 5 நாட்களுக்கு பிறகு நேற்று சவரனுக்கு 192 அதிகரித்தது. இதனால், நகை வாங்குவோர் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் அதிரடியாக உயர்ந்து வந்தது. மார்ச் 23ம் தேதி கடந்த 7ம் ேததி வரை சவரனுக்கு 11,712 வரை உயர்ந்தது. 7ம் தேதி ஒரு சவரன் 43,328க்கு விற்பனையாகி வரலாற்று சாதனை படைத்தது. அதன் பிறகு 8ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்து வந்தது. 8ம் தேதி ஒரு சவரன் 43,080, 10ம் தேதி 42,920, 11ம் தேதி 41,936, 12ம் தேதி 40,832க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் 5,076க்கும், சவரன் 40,608க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,740 வரை குறைந்தது. தங்கம் விலை குறைந்து வந்தது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் நேற்று தங்கம் விலை அதிகரித்தது. நேற்றைய தினம் கிராம் 24 அதிகரித்து ஒரு கிராம் 5100க்கும், சவரனுக்கு 192 அதிகரித்து ஒரு சவரன் 40,800க்கும் விற்கப்பட்டது. சற்று குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் அதிகரித்திருப்பது நகை வாங்குவோர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், “ தங்கம் விலை இந்த காலக்கட்டத்தில் கூடும், குறையும் காலமாகும். முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். அடுத்த வாரம் வரை இப்படி கூடுவதும், குறைவதுவான போக்கு தான் காணப்படும்” என்றார்.

Tags : buyers , gold
× RELATED இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120...