×

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 26 பேர் பலி புதையுண்ட 40 தமிழர்கள் கதி என்ன?: மீட்பு பணி தீவிரம்

திருவனந்தபுரம்: மூணாறு  நிலச்சரிவில் சிக்கி இறந்த மேலும் 9 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மண்ணில் புதையுண்டு உள்ள 40க்கு மேற்பட்ட தமிழக தொழிலாளர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. மீட்பு பணி தீவிரமாக நடக்கிறது.
 கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு மூணாறில் இருந்து 18  கி.மீட்டர் தொலைவில் உள்ள   ராஜமலை  பெட்டிமுடி பகுதியில் டாடா நிறுவனத்தின் ேதயிலை தோட்டம் உள்ள பகுதியில் பயங்கர  நிலச்சரிவு ஏற்பட்டது.  இங்கு பெரும்பாலும் தமிழக தொழிலாளர்கள் தான்  பணிபுரிந்து வருகின்றனர். அந்த பகுதியில் 21 குடும்பங்களை சேர்ந்த 81 பேர் வசித்துள்ளனர். நிலச்சரிவில் ெதாழிலாளர்களின் வீடுகள் அனைத்தும் மண்ணிற்குள் புதைந்தன. நேற்று முன்தினம் 17  சடலங்கள் மீட்கப்பட்டன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.  

பாதைகள் மிக மோசமாக  இருந்ததால் மீட்பு பணிக்கு  தேவையான உபகரணங்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி நடத்த  தீர்மானிக்கப்பட்டாலும் மோசமான காலநிலை காரணமாக ஹெலிகாப்டரை கொண்டு செல்ல முடியவில்லை. அன்று மாலை தான் 58 பேர் அடங்கிய தேசிய  பேரிடர் மீட்பு படை விபத்து  நடந்த இடத்தை அடைந்தது. அதற்குள் இருட்டி  விட்டதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை மீண்டும்  மீட்பு பணி தொடங்கியது. இதற்காக பல்வேறு  பகுதிகளில் இருந்து பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.  நேற்று ராஜா, விஜிலா (47), குட்டிராஜ் (48) பவன்தாஸ், மணிகண்டன் (30), தீபக் (18), சண்முக ஐயர்(58), பிரபு(55) ஆகியோர் உட்பட 9  பேர் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை  26 ஆக  உயர்ந்துள்ளது. முன்னாள் பஞ். உறுப்பினர் மாயம்: நிலச்சரிவில் மூணாறு பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான ஆனந்த சிவன் மற்றும்   அவரது குடும்பத்தினரும் சிக்கியுள்ளனர். இவர் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில்   ஒரு வீட்டில் குடும்பத்துடன் இருந்துள்ளார். இவரும், குடும்பத்தை  சேர்ந்த  21 பேரும் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம்என அஞ்சப்படுகிறது.

எல்லா உதவியும் செய்யப்படும்:  கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், ‘‘ராஜமலையில் விபத்தில் சிக்கிய 26 பேர் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டன. இதில் 3 பேரின் பெயர் விபரம் தெரியவில்லை. மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. சடலங்களை மொத்தமாக தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. விரைவில் பிரேத பரிசோதனை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும். அவர்களின் வருங்கால வாழ்க்கைக்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும். தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள், ேபாலீஸ், தீயணைப்பு படை, பொதுமக்கள் சிறந்த முறையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து மலையில் இருந்து சேறும் சகதியும் வந்துகொண்டிருப்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாதைகள் சேதமடைந்துள்ளதாலும் குறுக்கே மரங்கள் கிடப்பதாலும் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல சிரமம் உள்ளது.  

அமைச்சர்கள் சந்திரசேகரன், மணி ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்,’’ என்றார். பாரபட்சம் காட்டவில்லை: முதல்வர பினராய் விஜயன் மேலும் கூறுகையில், ‘‘கோழிக்கோடு விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ₹10 லட்சமும், நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு ₹5 லட்சமும் வழங்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இதில் எந்த பாரபட்சமும் இல்லை. இரண்டு விபத்துகளும் வெவ்வேறு வகையான துயர சம்பவங்கள். நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு முதல் கட்டமாகத்தான் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முடியாது. மீட்பு பணிகள் முடிவடையவில்லை. அதன் பின்னர் தான் விபத்தின் முழு தீவிரமும் தெரிய வரும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து விட்டனர். வருங்காலத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அரசு செய்யும் என்று உறுதி கூறுகிறேன். இது அரசின் கடமையாகும். இதுபோல் கோழிக்கோட்டில் மட்டும் நான் சென்றது ஏன் என்று கேட்கின்றனர். ராஜமலையில் மீட்பு பணிக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது,’’ என்றார்.

ஹெலிகாப்டர் வராததால் ஏமாற்றம்
சம்பவம் நடந்த அன்றே மீட்பு பணிகளுக்கு ஹெலிகாப்டர் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மோசமான வானிலை, நிறுத்துவதற்கு இடம் இல்லாதது போன்ற காரணங்களால் ஹெலிகாப்டர் வரவில்லை. நேற்றும் கனமழை கொட்டியதாலும், மீட்புக்கு தேவையில்லை என்பதாலும் ஹெலிகாப்டர் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். வனத்துறை, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருடன் 30க்கும் மேற்பட்ட தமிழர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது உறவினர்கள் உயிரோடு இருக்க மாட்டார்களா என சகதியில் தேடியது பரிதாபமாக இருந்தது.

பொதுமக்கள் போராட்டம்
ராஜமலையில் இருந்து 13 கி.மீ தூரத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தைக் காண, இறந்தவர்களின் உறவினர்கள் நேற்று காலை கூட்டமாக சென்றனர். அவர்களை ராஜமலையில் வனத்துறையினர் செக்போஸ்ட் அமைத்து மறித்தனர். அங்கு மீட்புபணி நடப்பதால் யாரும் செல்லகூடாது என தடுத்தனர். இதனால், இருதரப்புக்கும் வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் பொதுமக்கள் செக்போஸ்ட்களை அப்புறப்படுத்திவிட்டு நடந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கடவுள் தேசத்தில் கண்ணீர் குரல்
மண்ணில் புதையுண்டு கிடக்கும் 40க்கும் மேற்பட்டவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலையில் உறவினர்கள் சாப்பிடாமல் இருக்கின்றனர். மீட்புக்குழுவினரும் முழுவீச்சில் களமிறங்கி உடல்களை மீட்டு வருகின்றனர். இதில் கை, கால்கள் சேதம் அடையக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். கடவுள் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளாவில் தொழிலாளர்களுக்கு இப்படி ஒரு அவலமா என குரல்கள் ஒலிக்கத்தொடங்கி உள்ளது. ராஜமலை, மூணாறு பகுதிகளில் குடியிருக்கும் பாதுகாப்பில்லாத வீடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை காப்பாற்ற, அம்மாநில அரசு தனியார் எஸ்டேட்டுகளுக்கு கடிவாளம் போடவேண்டும் என்ற குரல் ஒலித்து வருகிறது.

15 கிமீ நடந்து வந்து தகவல்
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மூணாறுக்கு வந்தால்தான் செல்போன் டவர்கள் வேலை செய்கின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் உடல்களை தோண்டி எடுக்கும்போது அடையாளம் பார்த்துவிட்டு, அவர்களது உறவினர்கள், தமிழகத்தில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க 15 கிலோ மீட்டர் நடந்து வந்து, அல்லது டூவீலரில் வந்துதான் தகவல் தெரிவிக்க வேண்டியுள்ளது.  

குடும்பத்திற்காக உயிரை விட்ட சோகம்
தமிழகத்தில் வசிக்கும் தமது குடும்பத்தினர் நன்றாக இருக்க வேண்டும் என தேயிலை எஸ்டேட்களில் காலம், காலமாய் தமிழக தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். விசேஷ காலங்களில் மட்டும் சொந்த ஊரான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம். கொரோனா லாக்டவுனில் தங்களது ஊர்களுக்கே செல்லாமல் வசித்த, தமிழக தோட்ட தொழிலாளர்களின் பிணங்களைக் கூட சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு வழியில்லையே என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

நொடியில் அடங்கிய மூச்சு
மூணாறு, ராஜமலை பள்ளத்தாக்கில் நிலச்சரிவு ஏற்பட்டு, 4 லைன் வீடுகளில் குடியிருந்த சுமார் 80 பேரையும் ராட்சத பாறைகள், மண், வெள்ளம் ஆகியவை கோழிக்குஞ்சுகளை அமுக்குவது போல அடித்துச் சென்றது. இரவில் எந்த சத்தமும் இல்லாமல் நொடி நேரத்தில், அவர்களது மூச்சு அடங்கியது. முதல்நாள் கோபுரமாய் காட்சியளித்த வீடுகள், மறுநாள் மயானங்களாய் மாறிதால், அப்பகுதி மக்கள் சோகமடைந்தனர்.

குழந்தைகளை மீட்பது எப்போது?
4 லைன் வீடுகளில் 10 முதல் 15 குழந்தைகள், சிறுமிகள் வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட உடல்களில் குழந்தைகள் இல்லை. இவர்கள் மண்ணில் புதையுண்டு கிடக்கிறார்களா அல்லது கொட்டும் மழையினில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனரா என அதிகாரிகள் குழம்பியுள்ளனர். நேற்று காலை மழை விட்ட நிலையில் மதியம் மீண்டும் தொடர்ந்ததால் மீட்புக்குழுவினர் பெரும் சிரமங்களை சந்தித்தனர். இவர்களுக்கு உதவியாக பொதுமக்கள் களமிறங்கியது ஆறுதலான விஷயம்.

வீடுகளில் இருந்தது 100 பேர்?
டாடா நிறுவனத்தின் கணக்குப்படி வீடுகளில் 81 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், தமிழகத்தில் இருந்து பல உறவினர்கள் இங்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே, மண்ணுக்கடியில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேல் இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த குடியிருப்பின் 100 மீட்டருக்கு கீழ் ஓடும் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிலர் மழை வெள்ளத்துடன் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் விழுந்திருக்கலாம் எனவும்   அஞ்சப்படுகிறது.

Tags : Tamils ,landslides , fate of 40 Tamils, far killed 26 people,landslides , Intensity , rescue work
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!