×

மதுரையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டடப் பணிகள் விரைவில் தொடங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை வடபழஞ்சியில் 900 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் பற்றி மருத்துவர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மதுரையில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.247 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தீவிரமாக கொரோனா தடுப்பு பணி நடைபெற்று வருகிறது. உலக சுகாதார அமைப்பு, ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்களின்படி கொரோனா பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மதுரையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வீடு வீடாக சோதனை செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதி உள்ளது.அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

மதுரையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 100 நாட்கள் வேலைத் திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மதுரையில் 3 தொழிற்பேட்டைகளில் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் பல்வேறு நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்பீட்டில் தொடங்கியுள்ளன. இதுதவிர மதுரையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

Tags : Palanisamy ,cancer hospital ,Madurai ,announcement , Madurai, Rs 25 crore, Cancer, Hospital, Chief Minister Palanisamy, announcement
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை