×

சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை

* கடும் வெயிலால் பூக்கள் உதிர்ந்தன

* கோடை மழையும் கைவிரிப்பு

மதுரை : மதுரை மாவட்டத்தில் கொளுத்தி எடுக்கும் கோடை வெயில், மழை இன்மை காரணங்களால் பூக்கள் உதிர்ந்து, விளைச்சல் சரிந்து உள்ளூர் மாம்பழங்கள் சீசன் துவங்கியும், மார்க்கெட்டிற்கு வருகையின்றி வெறிச்சோடி இருக்கிறது.தமிழ்நாட்டில் 40க்கும் அதிக வகையிலான மாம்பழங்கள் விளைகின்றன. மதுரை மாவட்டத்தில் கல்லாமை துவங்கி இமாம்பசந்த், பெனோட் அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்கோவா, கிரேப், பாலாமணி, செந்தூரம், பஞ்சவர்ணம், ருமேனியா, காசாலட்டு உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விளைகின்றன.

அலங்காநல்லூர், பாலமேடு, கடவூர், அழகர்கோவில் பகுதிகள் மட்டுமின்றி, அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் உள்ளிட்ட பகுதிகள் துவங்கி, சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம், பூவந்தி முதல், விருதுநகர், தேனி மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகள் என தென்பகுதியின் பல்வேறு இடங்களில் இருந்தும் அதிகளவில் மாம்பழங்கள் மதுரை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

பொதுவாக கோடை காலத்தில் மா, பலா, வாழை என முக்கனிகள் முழுமையாக கைகொடுக்கும். ஆனால் இம்முறை மார்ச், ஏப்ரல் கடந்து மே மாதம் துவங்க இருக்கும் நிலையிலும், மாம்பழம் சீசன் துவங்கவில்லை. கடைகளில் வெளிமாநில மாம்பழங்கள், அதுவும் வரத்து குறைவால் விலை எகிறி நிற்கிறது.* மதுரை விவசாயிகள் கூறும்போது, ‘‘கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலுடன், கடந்த காலத்தில் மழை பொய்த்ததும் மாம்பழ விளைச்சலை மிகவும் பாதித்து விட்டது. மாமரங்களின் பூக்கள் அதிகளவில் உதிர்ந்து, காய் பிடிப்பின்றி இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்திலேயே அறுவடையை துவங்கி விட்டோம்.

மாங்காய்களுக்கு மார்ச் முதல் ஜூலை வரைதான் சீசன். நூறு மரங்களில் குறைந்தது ஒரு டன் மாங்காய்களாவது தினமும் பறித்து கடந்த காலங்களில் விற்பனைக்கு அனுப்புவோம். பெரிய வியாபாரிகளிடமிருந்து சிறு வியாபாரிகள், தினசரி வாங்கிச் சென்று தெருத்தெருவாகவும் விற்பனை செய்வோர் என பலரும் பயனடைவர்.இந்த ஆண்டு இதுவரையிலும் மரங்களில் காய்கள் இல்லாத நிலையில், உள்ளூர் விளைச்சலின்றி கடைகளுக்கு அனுப்ப முடியவில்லை.

மார்ச், ஏப்ரல் மாதத்தில் மதுரையில் மழையளவு மிகச்சரிந்திருப்பதால், மாம்பழ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக பல மரங்கள் காய்க்கவில்லை. அதைவிடக் கொடுமையாக வளர்ந்து நிற்கும் மரங்கள் பலவும் வாடத் தொடங்கி விட்டன. கடந்த ஓராண்டாக நீடித்த வானிலை மற்றும் போதிய மழையின்மையால் கடைசி நேரத்தில் மா விவசாயிகளான நாங்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளோம்’’ என்றனர்.

கடந்த 2011, 2012ல் மதுரையில் 47 மற்றும் 76 மி.மீ மழையளவுகள் பதிவாகின. 2013ல் 13 மிமீ மழை பதிவானபோதே, மாம்பழ விளைச்சல் மிக மோசமாக இருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து இதுவரை மதுரையில் 0.2 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. எனவே, மாம்பழ விளைச்சல் பாதிப்பு தவிர்க்க முடியாததாகி இருக்கிறது.

* மதுரை வியாபாரிகள் கூறும்போது, ‘‘மதுரை பழ மார்க்கெட்டானது, தமிழ்நாட்டின் முக்கிய பழச்சந்தை என்ற பெருமைக்குரியதாக இருக்கிறது. ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் என சுற்றிய தென்மாவட்ட பகுதிகள் அனைத்திற்கும் மையமான பழச்சந்தையாக இதுவே உள்ளது. பொதுவாக மாம்பழ சீசனில் ஒரு நாளைக்கு 100 முதல் 150 டன் மாம்பழங்கள் இங்கு விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு 20 டன்கள் கூட நெருங்க முடியாத பரிதாப நிலையில் மாம்பழங்கள் வரத்து இருக்கிறது. இந்த வரத்து குறைவு விலை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கிறது’’ என்றனர்.

The post சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai district ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...