×

நெல் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர பாதுகாப்பான கிடங்கு வசதி: அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை: நெல் கொள்முதல் நிலையங்களில் நிரந்தரமான பாதுகாப்பான கிடங்கு வசதிகளை ஒவ்வொரு ஒன்றியத்திலும் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் சண்முகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நெல் ஒரு பிரதானமான பயிர். காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பகுதி மாவட்டங்களில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் செயல்படுவதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் மழையில் நனைந்து விவசாயிகளுக்கும், அரசுக்கும் ஆண்டுதோறும் இழப்பு ஏற்படுகிறது. நனைந்த நெல்மூட்டைகள் அப்படியே அடுக்கப்படுவதால் கெட்டுப்போய் பயன்படுத்த முடியாத அளவுக்கு வீணாகிறது. விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்த நெல் இப்படி வீணாவதை எவராலும் நியாயப்படுத்த முடியாது.

இந்த ஆண்டு மே மாதம் பெய்த கோடை மழை, ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த மழையால் பல லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகிவிட்டது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டது. எனவே இத்தகைய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் நிரந்தரமான பாதுகாப்பான கிடங்கு வசதிகளை தேவைக்கேற்ப ஒவ்வொரு ஒன்றியத்திலும் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல் முழுவதும் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு பணம் வழங்கப்படுவதை, உத்தரவாதப்படுத்த வேண்டும். அத்துடன் மழையால் நனைந்து நாசமான நெல் மூட்டைகளுக்கு உரிய பணம் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Paddy Procurement Centers ,Government ,Tamil Nadu Farmers Association ,Secure Warehousing Facility , Paddy Procurement Station, Warehouse Facility, Government of Tamil Nadu Farmers Association, Request
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு