×

மதுரை ஜி.ஹெச்சில் சிகிச்சை சரியில்லை 2 நாளில் இறந்துவிடுவேன் என ஆடியோ வெளியிட்டவர் உயிரிழப்பு: ராஜபாளையம் டாக்டரை காவு வாங்கிய கொரோனா

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் திரவுபதியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சாந்திலால் (67). அங்கு தனியாக கிளினிக் நடத்தி வந்தார். இவரது ஒரே மகள் அமெரிக்காவில் உள்ளார். மனைவி இறந்துவிட்டதால், தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார். இங்குள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை சரியில்லை எனக்கூறி தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். மூச்சுத்திணறல் அதிகமானதால், மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டாக்டர் சாந்திலால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

சமூக ஆர்வலரான டாக்டர் சாந்திலால், கடந்த 40 ஆண்டுகளாக ராஜபாளையம் பகுதியில் மருத்துவ சேவை செய்து வந்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபாடு காட்டிய இவர், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு நல உதவிகளும் வழங்கி வந்துள்ளார். இவரது மரணம், ராஜபாளையம் பகுதி மக்களை வேதனையடையச் செய்துள்ளது. இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவாறே, சமூக வலைத்தளங்களில் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், ‘‘இங்கு வழங்கப்படும் சிகிச்சையில் எனக்கு திருப்தி இல்லை. நான் இரண்டு நாட்களில் இறந்து விடுவேன். அனைவருக்கும் நன்றி...’’ என உருக்கமாக பேசியுள்ளார்.

* அதிமுக மாஜி நகராட்சி தலைவியும் கொரோனாவுக்கு பலி
அதிமுகவை சேர்ந்த ராஜபாளையம் முன்னாள் நகராட்சி தலைவி தனலட்சுமி (55), காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டார். பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

Tags : Madurai GH ,Rajapalayam Coron ,Kavu ,audio publisher , In Madurai GH, treatment is not good, I will die in 2 days, audio publisher, death
× RELATED இருபது நிமிட சிகிச்சை