×

நத்தக்களத்தை கையகப்படுத்தியதால் விளைநிலங்களில் பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்ட அவலம்

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அடுத்த கீழகல்கண்டார் கோட்டையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அழகுநாச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து கொண்டாடும் நத்தகளத்தை மாநகராட்சி கையகப்படுத்தியதால் ஊர்மக்கள் விளைநிலங்களில் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருவெறும்பூர் அருகே கீழகல்கண்டார்கோட்டையில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயில் அப்பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்குகிறது. இக்கோயில் அருகே உள்ள நத்தகளத்தில் கீழகல்கண்டார் கோட்டை, ஆலத்தூர், கீழக்குறிச்சி, நொச்சி வயல் புதூர், திருவெறும்பூர் மாரியம்மன் கோயில் தெரு, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் நெல் மணிகளை நத்தகளத்தில் வைத்து கதிர் அடிப்பது வழக்கம்.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நத்தகளத்தை கையகப்படுத்தியது. இதற்கு 5 ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசு அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் கழிவுநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அழகுநாச்சியம்மனுக்கு ஆடி அமாவாசை தினத்தன்று நத்தகளத்தில் பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டு வழிபடுவதை கிழகல்கண்டார்கோட்டை மக்கள் தொன்று தொட்டு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி நத்தகளத்தை கைப்பற்றியதால் இப்பகுதி பெண்கள் மற்றும் விவசாயிகள் பொங்கல் வைக்க இடமின்றி நேற்று அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் வேதனையுடன் பொங்கல் வைத்து அழகுநாச்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்தனர்.

முதல்வருக்கு எம்பி கடிதம்
இதற்கிடையில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் விவசாயிகள் பயன்படுத்தி வரும் நத்தகளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதை கைவிட்டு வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Tags : Pongalittu ,acquisition ,fields , Nattakkulam, farmland, Pongal
× RELATED வயல்களில் இலவச மண் பரிசோதனை